நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி மோசமான தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சகம் இன்று (நவம்பர் 6) கலைத்துள்ளது.
நவம்பர் 2-ஆம் தேதி இந்தியா, இலங்கை அணிகள் மோதிய கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் 302 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் இலங்கை படுதோல்வி அடைந்தது.
இதனை தொடர்ந்து ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் வாரியத்தை ராஜினாமா செய்யக்கோரி கிரிக்கெட் வாரிய வளாகத்தில் ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் இலங்கை கிரிக்கெட் வாரிய வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
தொடர் தோல்வியின் எதிரொலியால் ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்து உலகக் கோப்பையை வென்ற முன்னாள் இலங்கை கிரிக்கெட் தலைவர் அர்ஜுன ரணதுங்க தலைமையில் ஏழு பேர் கொண்ட இடைக்கால குழுவை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று நியமித்துள்ளார்.
1973 ஆம் ஆண்டு விளையாட்டுச் சட்டம் 25-ன் கீழ் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் மூன்று ஓய்வுபெற்ற நீதிபதிகள் உள்பட முன்னாள் இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் உபாலி தர்மதாச இடம்பெற்றுள்ளார்.
கடந்த மே மாதம் இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவராக ஷம்மி சில்வா தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆளுநருக்கு எதிரான வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை எப்போது?
பாஜக தலையீடு… ஸ்டாலின் உரை புறக்கணிப்பு?: இலங்கை அரசு விளக்கம்!