ADVERTISEMENT

இலங்கையின் தொடரும் அட்டூழியம்- ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்- ஆக.19-ல் ரயில் மறியல்!

Published On:

| By Mathi

Rameswaram Strike

தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வருவதைக் கண்டித்தும் இலங்கை சிறையில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களை விடுதலை செய்ய கோரியும் ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஆகஸ்ட் 11-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் (Rameswaram Fishermen Launch Indefinite Strike) ஈடுபட்டுள்ளனர்.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடிப்பது வழக்கம். ஆனால் இலங்கை கடற்படை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழ்நாட்டு மீனவர்களை தொடர்ச்சியாக கைது செய்து வருகிறது. மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்வது, மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட அட்டூழியங்களை நடத்தி வருகிறது இலங்கை கடற்படை.

ADVERTISEMENT

இந்த நிலையில் இலங்கை சிறையில் உள்ள அனைத்து தமிழ்நாட்டு மீனவர்களையும் படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்கங்களில் கூட்டமைப்பு செயலாளர் ஜேசுராஜா தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதனால் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. சுமார் 3000 மீனவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தால் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மீன்பிடி தொழிலை சார்ந்த 1000க்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்; மீனவர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 13-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டமும், 15-ந் தேதி உண்ணாவிரத போராட்டமும், 19-ந் தேதி ரயில் மறியல் போராட்டமும் நடத்த மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share