இலங்கையில் உணவு பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்க அரசு தரிசு நிலங்களில் ராணுவ வீரர்கள் விவசாயப் பணிகளை மேற்கொள்கிறார்கள்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் உணவு பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வரலாறு காணாத வகையில் அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. அந்நிய செலாவணி இருப்பு இல்லாததால் இறக்குமதி செய்ய முடியவில்லை. இதனால் இலங்கையில் வருகிற செப்டம்பர் மாதத்தில் கடும் உணவு பஞ்சம் ஏற்படும் நிலை உள்ளது.
இதையடுத்து உணவு பொருட்கள் உற்பத்தியை தீவிரபடுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் விவசாயப் பணியில் ராணுவ வீரர்களை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக பசுமை விவசாய வழிகாட்டல் குழுவை ராணுவம் உருவாக்கியது. முதல்கட்டமாக விவசாய நிபுணர்களுடன் கலந்தாலோசித்து நிலங்களைத் தேர்வு செய்து விதைகளை பயிரிடுவதற்கு களையெடுத்தல், உழுதல் போன்ற பணிகளை தொடங்குகிறார்கள்.
1,500 ஏக்கர் அரசு தரிசு நிலங்களில் இலங்கை ராணுவ வீரர்கள் விவசாயப் பணிகளை மேற்கொள்கிறார்கள். நாடு முழுவதும் உள்ள அனைத்து பாதுகாப்புப் படை தலைமையகங்களும், அமைப்புகளும் விவசாயப் பணியில் களம் இறங்கி உள்ளன.
இது தொடர்பாக பேசியுள்ள அதிகாரிகள், “நாட்டில் தரிசாக உள்ள 1,500 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களை விளைநிலங்களாக மாற்றி உணவு தானிய உற்பத்தியைப் பெருக்கி எதிர்காலத்தில் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்து கொள்ளும் இயக்கத்தில் ராணுவம் பங்கேற்கும். உணவு பாதுகாப்பு திட்டங்களை மேம்படுத்துவதற்கு பசுமை விவசாய வழிகாட்டும் குழுவை ராணுவம் அமைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, “உணவு நெருக்கடியால் 40 லட்சம் முதல் 50 லட்சம் பேர் வரை நேரடியாக பாதிக்கப்படுவார்கள். உணவு பாதுகாப்பு திட்டங்களுக்கு அனைத்து எம்.பி.க்களும் நேரடியாக பொறுப்பேற்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
**ராஜ்**