விலை உயர்வைக் கட்டுப்படுத்த இந்தியாவில் இருந்து 9.20 கோடி முட்டைகளை இறக்குமதி செய்ய உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இதனால் நாமக்கல் கோழிப் பண்ணையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்தியாவில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் உற்பத்தியாகும் முட்டைகள் ஈரான், ஈராக், மஸ்கட், குவைத், சவுதி, அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளுக்கும், மலேசியாவுக்கும் கண்டெய்னர் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது ஈரான் நாட்டில் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுவதால் அரபு நாடுகளுக்கு தரைவழி மார்க்கமாக கொண்டு செல்லப்படுகிறது. இதனால், நாமக்கல்லில் இருந்து முட்டை ஏற்றுமதி சற்று குறைந்தது.

இந்த நிலையில் அண்டை நாடான இலங்கையில் அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக கால்நடை தீவன இறக்குமதியில் பாதிப்பு ஏற்பட்டது. இதன் எதிரொலியால் அங்கு கடந்த மார்ச் மாதம் முதல் முட்டைகளுக்கு தட்டுப்பாடு உருவானது. அப்போது முதல், இலங்கை அரசு இந்தியாவில் இருந்து முட்டைகளை நம்பியுள்ளது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் இருந்து 20 லட்சம் முட்டைகளை இலங்கை இறக்குமதி செய்தது.

தற்போது விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், நுகர்வோருக்கு மலிவு விலையில் வழங்கவும் இந்தியாவில் இருந்து 9 கோடியே 20 லட்சம் முட்டைகளை இறக்குமதி செய்ய உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற மந்திரி சபை கூட்டத்தில் இதுதொடர்பான முடிவு எடுக்கப்பட்டதாக மந்திரி சபை செய்தி தொடர்பாளரும், ஊடகத்துறை மந்திரியுமான பந்துல குணவர்தனே தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அதிக அளவில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படும் என்பதால் நாமக்கல் கோழிப் பண்ணையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ராஜ்
