இலங்கையில் வருகிற ஜூலை 10ஆம் தேதி வரை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே எரிபொருள் வழங்குவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அந்நிய செலாவணி பற்றாக்குறை, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு போன்று தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடியினால் இலங்கை பொருளாதார ரீதியாக கடுமையாக தவிர்த்து வருகிறது.
இந்தியா, சீனா மற்றும் சில நாடுகளிடமிருந்து பொருளாதார உதவிகளை பெற்று வருகிறது இலங்கை. அந்த நாட்டில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், நாட்டில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரங்களாக காத்திருக்கின்றனர். இலங்கையில் சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள், வழங்க எரிபொருள் ஏதுமின்றி நிலையங்களை மூடிவிட்டன. மேலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில், நீண்ட வரிசையில் காத்திருந்த மக்களில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடும் எரிபொருள் தட்டுப்பாட்டினால் இலங்கையில் மின்சார தட்டுப்பாடும் நிலவுகிறது. வருகிற ஜூலை 10ஆம் தேதி வரை எரிபொருளை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வழங்குவதாக இலங்கை முடிவெடுத்துள்ளதால், ஜூலை 10ஆம் தேதி வரை பள்ளிகளும் இயக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன கூறுகையில், “இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு புதிய உச்சத்தை அடைந்துள்ளது. தற்போது நாட்டில் நிலவிவரும் எரிபொருள் தட்டுப்பாட்டினால் வருகிற 10ஆம் தேதி வரை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே எரிபொருள் வழங்குவதாக இலங்கை அரசு முடிவு எடுத்துள்ளது. மேலும் ஜூலை 10ஆம் தேதி வரை பள்ளிகளும் இயங்காது என்று தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.” என்று தெரிவித்தார்.
