பஞ்சாப் அணிக்கு எதிரான இமாலய வெற்றியின் மூலம், புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து 8வது இடத்திற்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. srh beat punjab big target easy with abishek 141
பேய்க்கும் பேய்க்கும் சண்டை என்று சினிமாவில் ஒரு வசனம் வரும். அது தான் நேற்று (ஏப்ரல் 12) இரவு ஹைதராபாத்தில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆட்டத்துக்கு பொருந்தும்.
அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் குவித்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் 36 பந்துகளில் 86 ரன்கள் குவித்தார். அவருக்கு அடுத்தபடியாக பிராப்சிம்ரன் 42 ரன்களும், பிரியான்ஷ் ஆர்யா 36 ரன்களும், ஸ்டோய்னிஸ் 34 ரன்களும் குவித்தனர்.

ஹைதராபாத் அணி தரப்பில் ஹர்ஷல் பட்டேல் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.
அதனைத் தொடர்ந்து இமலாய இலக்கை நோக்கி பேட்டிங் செய்த ஹைதராபாத் அணியில் துவக்க வீரர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் பஞ்சாப் அணியின் பந்துவீச்சை சுக்குநூறாக சிதறிடித்தனர்.
வெறும் 12 ஓவர்களில் 170 ரன்கள் குவித்த நிலையில் டிராவிஸ் 66 ரன்களில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் வெறும் 40 பந்துகளில் அபார சதமடித்தார் அபிஷேக் சர்மா.
அதன்பின்னரும் அதிரடியை தொடர்ந்த அவர், 10 சிக்சர்கள், 14 பவுண்டரிகள் என 141 ரன்களில் ஆட்டமிழந்தார். இது ஐபிஎல் வரலாற்றில் இந்திய வீரரின் முதல் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
தொடர்ந்து ஜோடி சேர்ந்த கிளாசன் மற்றும் இஷானும் அதிரடியாக ஆட, 18.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எளிதாக எட்டியது ஹைதராபாத். இதன்மூலம் தங்களது தொடர் தோல்விக்கும் முற்றுப்புள்ளி வைத்தது. மேலும் இந்த அபார வெற்றியின் மூலம் 10 இடத்தில் இருந்து 8வது இடத்திற்கு புள்ளிப்பட்டியலில் முன்னேறியது.
அதே வேளையில், 5 தொடர் தோல்விகளுடன் 9வது இடத்தில் இருந்த சிஎஸ்கே அணி, 10வது இடத்திற்கு தள்ளப்பட்டது.
இதனால் ஹைதராபாத் அணியிடம் அதிர்ச்சி தோல்வி கண்ட பஞ்சாப் அணியை விடவும், வேதனையில் உள்ளனர் சென்னை ரசிகர்கள்.