இந்திய ஹாக்கி அணி கோல்கீப்பர் ஸ்ரீஜேஷின் நம்பர் 16 ஜெர்ஸிக்கு நிரந்தரமாக ஓய்வளித்ததுடன் ஆண்கள் ஹாக்கி ஜூனியர் அணியின் பயிற்சியாளராக நியமித்தது ஹாக்கி இந்தியா அமைப்பு.
நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி ஸ்பெயினை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை வென்றது. இதற்கு முன்பு நடந்த டோக்கியோ ஒலிம்பிக்கிலும் இந்தியா ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
பாரிஸ் ஒலிம்பிக் ஆரம்பிக்கும் முன்பே, பாரிஸ் ஒலிம்பிக் போட்டியுடன் தான் ஹாக்கி விளையாட்டிலிருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்திருந்தார்.
அதன்படி, ஸ்பெயினை வீழ்த்தி, வெண்கலப் பதக்கத்தை வென்றவுடன், தனது ஓய்வை அறிவித்தார் ஸ்ரீஜேஷ். இதனையடுத்து, இந்தியா திரும்பிய ஸ்ரீஜேஷிற்கு டெல்லியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வில், ஹாக்கி இந்தியாவின் பொதுச்செயலாளர் போலா நாத் “ஸ்ரீஜேஷின் நம்பர் 16 ஜெர்ஸிக்கு நிரந்தரமாக ஓய்வளித்துள்ளோம். ஆனால் இன்னும் பல ஸ்ரீஜேஷ்கள் அவர் உருவாக்க வேண்டும் என்பதற்காக , ஆண்கள் ஹாக்கி ஜூனியர் அணியில் இந்த நம்பர் 16 தொடரும்” என்றார்.
ஹாக்கி இந்தியா ஜூனியர் அணியின் பயிற்சியாளராகத் தான் நியமனம் செய்யப்பட்டிருப்பதை பற்றி “எனக்கு வெகு காலமாக பயிற்சியாளராக ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் முதலில் எனது குடும்பத்தினரிடம் ஆலோசிக்க வேண்டும்” என்று ஸ்ரீஜேஷ் கூறினார்.
மேலும் அவர் “ எப்படி ராகுல் டிராவிட் U-19, இந்தியா A, அணிகளுக்கு பயிற்சி அளித்து, பின்பு, சீனியர் இந்திய அணியின் பயிற்சியாளராக ஆனாரோ, நானும் ஹாக்கி ஜூனியர் அணிக்கு முதலில் பயிற்சி அளிக்க விரும்புகிறேன்” என்றார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியிலிருந்து விலக அழுத்தமா?: குஷ்பு விளக்கம்!
ஆகஸ்ட் 19… நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு தயாராகும் அமைச்சர்கள்!