வேலுமணியோடு சிக்கப் போகும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்? அடித்தளம் போட்ட அறப்போர்!

Published On:

| By admin

முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி மீதான ஊழல் புகார்களில் அவரோடு, முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் சிக்கப் போகிறார்கள் என்ற தகவல் அதிகாரிகள் வட்டாரங்களிலும் அரசியல்வாதிகள் வட்டாரங்களிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு மட்டுமல்ல இந்திய அளவிலேயே ஊழல் என்றாலே அரசியல்வாதிகள்தான் பொதுப்புத்திக்கு நினைவுக்கு வருகிறார்களே தவிர, அந்த ஊழலில் அரசியல்வாதிகளோடு கை கோர்த்து நின்று ஈடுபட்ட அதிகாரிகள் அவ்வளவு அதிகமாக பேசப்படுவதில்லை.

கடந்த அதிமுக ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் அப்போதைய ஆளுங்கட்சியின் ஊழல்களை பற்றி பேசும்போது, ஆளுங்கட்சியின் அரசியல்வாதிகளை மட்டுமல்ல, அவர்களுக்கு உறுதுணையாக நின்றதாக அதிகாரிகள் மீதும் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். சில அதிகாரிகளை பெயர் குறிப்பிட்டே கூறினார். அதே அதிகாரிகள் இந்த திமுக ஆட்சியிலும் அவர்கள் அப்போது வகித்த பொறுப்புகளுக்கு இணையாகவோ அல்லது அதைவிட கூடுதலான பொறுப்புகளிலோதான் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த முரண்பாடுகள் திமுக கட்சியினர் இடையிலேயே விவாதமாகியிருந்த நிலையில்தான்… அறப்போர் இயக்கம் சில முக்கியமான கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

“திமுக ஆட்சிக்கு வந்தால் முன்னாள் அமைச்சர் வேலுமணி சிறைக்கு செல்வார் என்று ஒவ்வொரு பிரச்சார கூட்டத்திலும் சூளுரைத்த முதல்வர் ஸ்டாலின், அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை விசாரிக்க 8 மாதங்களாக ஏன் அனுமதி கொடுக்கவில்லை? ஊழல் டெண்டர்களை கையெழுத்து போட்டு அனுமதித்த அதிகாரிகளை விசாரிக்காமல் முன்னாள் அமைச்சர் வேலுமணியை எப்படி சிறைக்கு அனுப்புவீர்கள் முதல்வரே? 3 மாதத்தில் லஞ்ச ஒழிப்புத் துறைக்குக் கொடுக்க வேண்டிய அனுமதியை 8 மாதங்களாக கொடுக்காமல் வைத்திருக்கிறார் தற்போதைய நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்வழங்கல் துறை செயலாளர் சிவதாஸ் மீனா. அவர் யாருடைய உத்தரவின் பெயரில் செயல்படுகிறார்?
இது குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு திராணி இருக்கிறதா? இதுகுறித்து எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுக்குமா?” என்று கேள்விகளை அடுக்குகிறது அறப்போர் இயக்கம்.

அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன் இதுபற்றி கூறும்போது, “லஞ்ச ஒழிப்புத் துறையால் டெண்டர் முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்புடைய டெண்டர் முறைகேடுகளில் அதிகாரிகள் மீதான நடவடிக்கை தள்ளிப் போடப்பட்டுக் கொண்டே வருவது ஏன்?

எப்போது அதிகாரிகள் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படுகிறதோ அப்போதுதான் மற்ற அதிகாரிகளுக்கு பயம் இருக்கும்., ஆனால் இப்போது அதிகாரிகள், ‘பாருங்க ஆட்சி மாறினாலும் எங்களை ஒண்ணும் பண்ண முடியாது’ என்ற ஒரு ஸ்டேட்மென்ட் கொடுக்காத குறையாக பேசுகிறார்கள். இது அபாயகரமானது” என்று தெரிவித்திருந்தார். மேலும் இந்த விவகாரத்தில் அறப்போர் இயக்கம், ‘கொள்ளையனே வெளியேறு’ என்ற ஓர் இயக்கத்தையும் நடத்தினார்கள்.

இந்த நிலையில் முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான மாநகராட்சிகள் டெண்டர் முறைகேட்டில் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 12 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கேட்டு, தமிழக அரசுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.
“சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்காக டெண்டர் விட்டதில் அரசுக்கு 811 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு தொடர்ந்தது. இந்த புகார்கள் தொடர்பாக இருமுறை வேலுமணி மற்றும் அவர் தொடர்பானவர்களின் இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது. அதில் வேலுமணிக்கு நெருக்கமான அரசு அதிகாரிகளின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்த விவாகாரத்தின் தொடர் விசாரணை அடிப்படையில், 4 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 12 அதிகாரிகளையும் இந்த வழக்கில் சேர்க்க லஞ்ச ஒழிப்பு துறை முடிவு செய்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது சென்னை மாநகராட்சி கமிஷனராக இருந்த பிரகாஷ், கோவை மாநகராட்சி கமிஷனராக இருந்த விஜய் கார்த்திகேயன், சென்னை மாநகராட்சி துணை கமிஷனர்களாக இருந்த கந்தசாமி, மதுசூதனன் ரெட்டி மற்றும் ஐ.ஏ.எஸ். அல்லாத சென்னை மாநகராட்சியின் தலைமை பொறியாளராக இருந்த நந்தகுமார், முதன்மை பொறியாளராக இருந்த புகழேந்தி, தலைமை பொறியாளர் செந்தில்நாதன் ஆகியோரும் லஞ்ச ஒழிப்பு துறையின் வளையத்திற்குள் வந்துள்ளனர்.
ஏற்கனவே வேலுமணி மீது பத்து வாரங்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டும் அந்தக் காலக் கெடு தாண்டப்பட்டது. இந்நிலையில் அறப்போர் இயக்கத்தின் முன்னெடுப்பின் காரணமாக … ஊழல் வழக்கில் தொடர்புடைய ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதி கோரி தமிழக அரசுக்கு லஞ்ச ஒழிப்புத் துறை கடிதம் எழுதியிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
அரசின் அனுமதிக்குப் பின் ஐ.ஏ.எஸ்,. அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் அதிகாரிகளோடு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் கைது செய்யப்படலாம்.

-**வேந்தன்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share