புரதச்சத்து, மாவுச்சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவு இந்த முளைப்பயிறு சப்பாத்தி. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், விளையாட்டு வீரர்களுக்கு ஏற்ற உணவான இதில் அமினோ அமிலங்கள் மற்றும் தாது உப்புகள் நிறைந்துள்ளது. குழந்தைகள் விரும்பி சாப்பிட, கெட்டித் தயிரில் சிறிது சாட் மசாலா பவுடர் தூவி தொட்டுக்கொள்ள கொடுக்கலாம்.
என்ன தேவை?
கோதுமை மாவு – ஒரு கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம், முளைவிட்ட பச்சைப்பயறு – தலா கால் கப்
மிளகுத் தூள், சீரகத் தூள் – தலா அரை டீஸ்பூன்
தக்காளி – ஒன்று
பூண்டு – 4 பற்கள்
மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
முளைவிட்ட பயறை ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். வெங்காயம், தக்காளி, பூண்டை சிறிது உப்பு சேர்த்துத் தண்ணீர் விடாமல் அரைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, அரைத்த மசாலாவை வதக்கி, தேங்காய்த் துருவல், பயறு, மற்ற தூள் வகைகள், உப்பு சேர்த்து மிதமான வெப்பத்தில் வதக்கவும். பயறு மசாலா ரெடி. கோதுமையை சப்பாத்திக்குப் பிசைவது போல், நீர் விட்டுப் பிசைய வேண்டும். மாவை உருட்டி, குழி செய்து சிறிது மசாலாவை வைத்து மூடி, மசாலா வெளிவராதபடி சப்பாத்தி செய்யவும். கோதுமை மாவில் புரட்டி, கனமான சப்பாத்தியாகச் சுட்டுப் பரிமாறவும்.
