சென்னையில் ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்கவில்லை என்று தவறான தகவலை ஆட்சியாளர்கள் பரப்பி வருவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை முகலிவாக்கம் பகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மழை பாதித்த இடங்களை இன்று(நவம்பர் 14) ஆய்வு செய்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை துவங்கியதில் இருந்து ஆங்காங்கே கனமழையும், மிக கனமழையும் பெய்து வருகிறது.
அதனால் சென்னை மாநகரப்பகுதியில் பல்வேறு இடங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி இன்னும் வடியாமல் இருக்கிறது.
இதனால் அந்தப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். இன்று காலையிலிருந்து தற்போது வரை பல இடங்களுக்கு சென்று பார்த்தேன்.
இந்த திமுக அரசு சென்னை மாநகரப்பகுதியில் சென்னையில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை, முழுவதும் வடிந்துவிட்டது என்று பத்திரிக்கையிலும், ஊடகத்திலும் வெளியிட்டு வருகிறது.
எந்த அளவுக்கு தண்ணீர் தேங்கியிருக்கிறது என்பதை ஊடகங்கள் காண்பித்தால் சரியாக இருக்கும். ஏனென்றால் ஆட்சியாளர்கள் ஒரு தவறான செய்தியை மக்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.
திருவள்ளுவர் நகர், மணப்பாக்கம் என சுமார் 500 வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோன்று வி.என்.டி. அவென்யூ, ராஜலட்சுமி அவென்யூ, கொளப்பாக்கம் கணேஷ்நகர், மதனந்தபுரம் அதில் 400 குடியிருப்பில் வசிக்கின்ற மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
சில அமைச்சர்கள் சொன்னார்கள், அதிமுக ஆட்சியில் படகில்தான் வந்தார்கள் என்று. ஆனால் இப்போது மக்கள் படகுகளில் சென்று கொண்டிருப்பதை நேரடியாகவே பார்க்க முடிகிறது.
இந்த இடங்களை முதலமைச்சரும், அமைச்சர்களும் பார்க்கவில்லை போலும். எனவே உடனடியாக போர்க்கால அடிப்படையில், ராட்சத மோட்டார்களை வைத்து தண்ணீரை வெளியேற்றவேண்டும் என்று அரசை வலியுறுத்துகிறேன்.
இந்தப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவமுகாம் அமைக்கப்படவில்லை. உணவு உள்ளிட்ட அத்திவாசியப் பொருட்கள் எதுவும் வழங்கப்படவில்லை.
தற்போது குறைவான அளவே மழை பெய்து வருகிறது. அதிமுக ஆட்சியில் பெய்தது போன்று 30 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பொழிந்தால் சென்னை மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்திப்பார்கள்.

ஏனென்றால் முறையான வடிகால் பணிகள் எதுவும் செய்யவில்லை. அதிமுக ஆட்சியில்தான் 2400 கிலோமீட்டர் நீளமுள்ள வடிகால் கால்வாய் அமைப்பதற்கு ரூ. 3,500 கோடி ரூபாய் நிதி பெறப்பட்டு 750 கிலோமீட்டர் பணிகள் முடிந்துள்ளன.
அதிமுக ஆட்சிக்காலத்தில் பெறப்பட்ட நிதியை வைத்தே தற்போது சிங்கார சென்னை 2.0 என்ற பெயரில் திட்டங்களை மாற்றி செய்து வருகின்றனர்.
தற்போது நடைபெற்று வரும் பணிகள் தரமற்று, அவசரக் கோலத்தில் நடந்து வருகிறது” என்று எடப்பாடி பழனிசாமி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
கலை.ரா
கொடநாடு வழக்கு: சசிகலாவிடம் 30 மணி நேரம் விசாரணை, 280 கேள்விகள்!