பேட்டால் அடித்து விடுவேன் மிரட்டிய பஞ்சாப் வீரர்… 2 போட்டிகளில் விளையாடுவதற்கு ஐசிசி தடை!

Published On:

| By Manjula

மைதானத்தில் பேட்டை காட்டி அடித்து விடுவேன் என அயர்லாந்து வீரரை மிரட்டிய சிக்கந்தர் ராசாவுக்கு, 2 போட்டிகளில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது.

அயர்லாந்து அணி 3 டி2௦ போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக தற்போது ஜிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

நேற்று முன்தினம் (டிசம்பர் 7) அயர்லாந்து – ஜிம்பாப்வே அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து விளையாடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா பவுலிங்கில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், பேட்டிங்கிலும் அபாரமாக ஆடி 65 ரன்களை குவித்தார். முதல் போட்டியின் ஆட்டநாயகன் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

இதற்கிடையில் போட்டியின் போது ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா செய்த செயல் தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

சிக்கந்தர் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது அயர்லாந்து வீரர்கள் ஜாஸ் லிட்டில், கோர்டிஸ் கேம்பர் ஆகியோருடன் மோதலில் ஈடுபட்டார்.

அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக பேட்டால் அடித்து விடுவேன் என அயர்லாந்து வீரரை மிரட்டினார்.

நடுவர் தலையிட்டு சமாதானம் செய்ய ராசாவின் இந்த செயலால் கடுப்பான அயர்லாந்து வீரரும் பதிலுக்கு அவரை அடிக்க சென்றார்.

வேறு வழியின்றி நடுவர்கள் இரண்டு தரப்பினரையும் சமாதானம் செய்து போட்டியை முடித்துள்ளனர்.

இந்த நிலையில் போட்டிக்கு பின் நடந்த விசாரணையில் சிக்கந்தர் ராசாவின் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டு உள்ளதால், போட்டிக்கான ஊதிய தொகையில் இருந்து அவருக்கு 50% அபராதம் விதித்த ஐசிசி இரண்டு போட்டிகளில் விளையாடுவதற்கும் தடை விதித்துள்ளது.

இதேபோல அயர்லாந்து வீரர்கள் ஜாஸ் லிட்டில், கோர்டிஸ் கேம்பர் ஆகியோருக்கும் அவர்களின் ஊதிய தொகையில் 15% அபராதமாக ஐசிசி விதித்துள்ளது.

சிக்கந்தர் ராசா ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக ஆடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்… 

-மஞ்சுளா 

மழை, வெள்ளம்: சிறு,குறு நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பு!

முதல்வருக்கு பதில் தீரன் சின்னமலை சிலையை திறக்கும் முன்னாள் ஆளுநர்: நடந்தது என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment