ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடர் நாளை (ஆகஸ்ட் 18) தொடங்கப்படும் நிலையில் தோளில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகி உள்ளார். அவருக்கு பதிலாக ஷாபாஸ் அகமது சேர்க்கப்பட்டுள்ளார்.
ஜிம்பாப்வேக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகிறது. முதலாவது ஒரு நாள் போட்டி நாளை (ஆகஸ்ட் 18 – பிற்பகல் 12.45 மணி) ஹராரேயில் தொடங்குகிறது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியை கே.எல்.ராகுல் வழிநடத்துவார். ஷிகர் தவான் அணியின் துணை கேப்டனாக செயல்படுவார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இந்தத் தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், இந்த தொடரில் அணியில் இடம் பெற்றிருந்த ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தோளில் காயம் காரணமாக விலகி உள்ளார். மான்செஸ்டரில் நடந்த ராயல் லண்டன் ஒருநாள் கோப்பை போட்டியில் களமிறங்கும் போது வாஷிங்டன் சுந்தர் இடது தோளில் பலமாக காயம் ஏற்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு சுந்தர் ஒருநாள் போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஒருநாள் தொடரில் ஷாபாஸ் அகமது சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கக்த்தைச் சேர்ந்த ஷாபாஸ், 18 முதல் தர போட்டிகளில் விளையாடி 7 அரைசதங்கள் மற்றும் ஒரு சதத்துடன் 1041 ரன்கள் எடுத்துள்ளார். 57 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். மேலும், 2019-20 ரஞ்சி டிராபியில் பெங்கால் அணி இறுதிப் போட்டிக்கு வந்தபோது 500 ரன்களுக்கு மேல் எடுத்தார் மற்றும் 35 விக்கெட்டுகளை எடுத்தார்.
இவர் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக ஆடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-ராஜ்