விக்கெட் இழப்பின்றி வேட்டையாடிய இந்தியா!

விளையாட்டு

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது.

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது.

இவ்விரு அணிகளுக்கு இடையில் நடைபெற இருக்கும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில், அதன் முதல் ஒருநாள் போட்டி இன்று (ஆகஸ்ட் 18) ஹராரேவில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடைபெற்றது.

முன்னதாக, ஆசியக் கோப்பையை கருத்தில்கொண்டு சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்டவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கே.எல்.ராகுல் தலைமையில் ஜிம்பாப்வே தொடரை இந்திய அணி எதிர்கொண்டது. இந்திய அணியில் ஷுப்மன் கில், இஷான் கிஷன், சிராஜ், தீபக் சாஹர் போன்றோர் இடம் பெற்றனர்.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஜிம்பாப்வே அணி ஆரம்பம் முதல் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள சிரமப்பட்டது.

அந்த அணியின் தொடக்க வீரர்களும், மிடில் ஆர்டரில் களமாடிய பேட்டர்களும் இந்திய அணியின் பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

முதல் நான்கு பேட்ஸ்மென் ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டமிழந்தார்கள்.

இதனால் அந்த அணி முதல் 10 ஓவர்களிலேயே 31 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்தது.

அதன்பின்னர், 25 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்து தடுமாறியது.

இந்த நிலையில், களமிறங்கிய பின்வரிசை வீரர்கள் ஓரளவு நிதானத்துடன் விளையாடி அணியைச் சரிவிலிருந்து மீட்டனர்.

அதில், பிராட் எவான்ஸ் மற்றும் ரிச்சர்ட் ஜோடி, 9வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்து அசத்தினர்.

இறுதியில் ஜிம்பாப்வே அணி 40.3 ஓவர்களில் 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அவ்வணியில் அதிகபட்சமாக பிராட் எவான்ஸ் 33 ரன்களும், கேப்டன் ரெஜிஸ் 35 ரன்களும், ரிச்சர்ட் 34 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணி தரப்பில், தீபக் சாஹர், பிரசித் கிருஷ்ணா, அக்‌ஷர் படேல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஜிம்பாப்வே பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுத்தனர்.

இதனையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் ஷுப்மன் கில் ஜோடி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது.

இவர்கள் இருவரின் பார்ட்னர்ஷிப்பை உடைக்க ஜிம்பாப்வே வீரர்கள் எடுத்த அனைத்து முயற்சிகளும் பலனளிக்கவில்லை.

சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.

இதன்மூலம் இந்திய அணி 30.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்றது. ஷுப்மன் கில் 72 பந்துகளில் 82 ரன்களும், ஷிகர் தவான் 113 பந்துகளில் 81 ரன்களும் குவித்து இறுதிவரை களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

ஜெ.பிரகாஷ்

இந்தியா Vs  ஜிம்பாப்வே இன்று ஒருநாள் போட்டி: தவானின் மகிழ்ச்சியும் வருத்தமும்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *