3வது ஒருநாள் போட்டியிலும் இந்தியா அபார வெற்றி!

விளையாட்டு

ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி, 3வது ஒருநாள் போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை முழுமையாக வென்றது.

ஜிம்பாப்வே நாட்டுக்குச் சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய அணி, அங்கு 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

முன்னதாக, ஆசியக் கோப்பையை கருத்தில்கொண்டு சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்டவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கே.எல்.ராகுல் தலைமையில் ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணி எதிர்கொண்டு விளையாடி வருகிறது.

ஏற்கெனவே மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ள நிலையில், இவ்விரு அணிகளுக்கிடையேயான 3வது ஒருநாள் ஆட்டம் ஹராரேவில் இன்று (ஆகஸ்ட் 22) நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் சிராஜ், பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதிலாக தீபக் சஹார், அவேஷ் கான் இடம்பெற்றனர்.

கேப்டன் கே.எல்.ராகுலும் ஷிகர் தவானும் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினார்கள்.

இருவரும் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தார்கள். ராகுல் 30 ரன்களில் வெளியேற, தவான் 40 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்தார். அவர்களுக்குப் பிறகு இணைந்த ஷுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் கூட்டணி வலுவான அடித்தளம் அமைத்தனர்.

2வது ஒருநாள் அரைசதத்தை 61 பந்துகளில் எடுத்த இஷான் கிஷன் அதே ரன்னில்(50), ரன் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் வந்த தீபக் ஹூடாவும் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார். 82 பந்துகளில் தன்னுடைய முதல் ஒருநாள் சதத்தை எடுத்த ஷுப்மன் கில்,

130 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்மூலம் ஜிம்பாப்வே நாட்டில் அதிக ரன்கள் எடுத்த சாதனைக்கு சொந்தக்காரரானார், கில். இதற்குமுன் சச்சின் டெண்டுல்கர் 1998ம் ஆண்டு 127 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

பின்னர், சஞ்சு சாம்சன் 15 ரன்களிலும் அக்‌ஷர் படேல் 1 ரன்னிலும் ஆட்டமிழக்க இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தது.

ஜிம்பாப்வே வீரர் பிராட் இவான்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர், 289 எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி,

49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 276 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ஜெ.பிரகாஷ்

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தொடரை கைப்பற்றிய இந்தியா

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *