கடந்த 2007 ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை ஆகியவற்றை இந்திய அணி வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங்.
அந்த இரண்டு உலகக்கோப்பைகளிலும் தொடர் நாயகன் விருதினையும் யுவராஜ் வென்றிருந்தார்.
அப்படி சிறப்பு மிக்க வீரராக திகழ்ந்த யுவராஜ் சிங் கடந்த 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் போது புற்று நோயுடன் போராடி களத்தில் விளையாடியது குறித்து சில உருக்கமான தகவல்களை பகிர்ந்துள்ளார் முன்னாள் இந்திய அணி வீரர் ஹர்பஜன் சிங்.
இது குறித்து அண்மையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் பேசிய அவர், “யுவராஜ் சிங்கின் உடல்நிலை அப்பொழுது சரியில்லாமல் இருந்தது.
அவருடைய முகம் எப்போதுமே கவலையுடன் சோகமாகவே இருக்கும். பேட்டிங் செய்யும்போது கூட களத்தில் அவருக்கு அதிகமாக இருமல் ஏற்படும். அதுமட்டும் இன்றி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது அவர் மைதானத்தில் ரத்த வாந்தியும் எடுத்தார்.
நான் அவரிடம் ஏன் இவ்வளவு இருமல் வருகிறது? உன்னுடைய வயதுக்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? என்றெல்லாம் திட்டி இருக்கிறேன்.
ஆனால் யுவராஜ் சிங்கோ புற்று நோயோடு போராடி உலகக்கோப்பை தொடரில் விளையாடினார் அது தெரியாமல் நான் கேலியும் செய்திருக்கிறேன். உண்மையான சாம்பியனான அவர் இல்லையெனில் நிச்சயம் இந்திய அணிக்கு உலகக் கோப்பை கடினமாகத் தான் இருந்திருக்கும்.

ஒருமுறை அல்ல இருமுறை நாம் உலகக் கோப்பையை வெல்ல யுவராஜ் சிங் கை கொடுத்துள்ளார். அவர் போன்ற வீரர்கள் தனித்துவமானவர்கள்” என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “நமது அணியின் மருத்துவர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னதாக யுவராஜ் சிங்கிற்கு சரியாக தூக்கம் வரவில்லை என்பதனால் தூக்க மாத்திரை வழங்க சென்றுள்ளார்.
அப்போது , யுவராஜ் சிங் அவரிடம் …’அந்த கடவுள் என்னிடம் இருந்து என்ன வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டும், உயிர் கூட போகட்டும்…வலியை கொடுக்கட்டும், ஆனால் எங்களுக்கு உலகக் கோப்பையை கொடுத்தால் போதும் என்றாராம்.
மேலும், நான் இறுதிப் போட்டியில் விளையாடிய பின்னர் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று யுவராஜ் சிங் அப்போது கூறியதை உருக்கமாக நினைவு கூர்ந்தார் ஹர்பஜன் சிங்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
முழுமையாக முடங்கிய நாடாளுமன்றம்: காங்கிரஸ் பேரணி!
பல்பீர் சிங்கிற்கு கண்டனம்: நீதிமன்ற புறக்கணிப்பில் வழக்கறிஞர்கள்!