இலங்கையை 109 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் தென்னாப்பிரிக்கா அணி முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவிய நிலையில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. மூன்றாவது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா முதல் இடத்திற்கு முன்னேறியது.
இந்த நிலையில் இலங்கை – தென்னாப்பிரிக்கா இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று (டிசம்பர் 9) நடைபெற்றது.
இலங்கை அணிக்கு கைவசம் ஐந்து விக்கெட்டுகள் இருக்க, மேலும் 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. இந்திய ரசிர்களும் இலங்கை அணியின் வெற்றிக்காக காத்திருந்தனர். காரணம் இலங்கை அணி வெற்றி பெற்றால் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறும் என்று எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால் தென்னாப்பிரிக்காவின் கேசவ மகராஜ் மற்றும் ஜேன்சன் ஆகியோர் அபாரமாக பந்துவீசி இலங்கை அணியை 238 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தனர்.
இதனால் 109 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி, 63.33 வெற்றி சதவீதத்துடன் 2வது இடத்தில் இருந்து முதலிடத்திற்கு முன்னேறியது.
இதன் மூலம் புள்ளி பட்டியலில் தென்னாப்பிரிக்கா அணி தற்போது முதல் இடத்தில் உள்ளது.

இதனால் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியா 60.71 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்திய அணி தற்போது 57.29 வெற்றி சதவீதத்துடன் மூன்றாவது இடத்திலும், இலங்கை அணி 45.45 என்ற வெற்றி சதவீதத்துடன் நான்காவது இடத்தில் இருக்கின்றன.
பைனலில் யாருக்கு வாய்ப்பு?
தென்னாப்பிரிக்க அணியிடம் 2-0 என்ற கணக்கில் தொடரை இழந்த இலங்கை அணி பைனலுக்கு செல்லும் வாய்ப்பு வெகுவாக குறைந்துள்ளது.
அதேவேளையில் பாகிஸ்தானுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் தென்னாப்பிரிக்கா அணி ஒன்றில் வென்றால் கூட பைனுலுக்கு முன்னேறிவிடும்.
அதே போன்று அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கை செல்லும் ஆஸ்திரேலிய அணி இரண்டு டெஸ்ட் போட்டியில் வென்றால் பைனலுக்கு முன்னேறி விடும்.

இதன்காரணமாக அடுத்து நடைபெற உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற கட்டாயத்தில் உள்ளது.
இல்லையென்றால் இரண்டு முறை தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு சென்ற இந்திய அணி மூன்றாவது முறை செல்லும் வாய்ப்பு இல்லாமலே போய்விடும்.
இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் வரும் 14ஆம் தேதி நடைபெற உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஆயிரம் கைகள் மறைத்தாலும்… சஸ்பெண்ட் குறித்து ஆதவ் அர்ஜூனா ரியாக்சன்!
ஆதவ் நீக்கம்… யார் கொடுத்த அழுத்தம்? – ஸ்டாலினை சந்தித்த பின் திருமா பேட்டி!