மகளிர் ஐபிஎல் அணிகளுக்கான ஏலம் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
15 ஆண்டுகளுக்கு மேலாக ஐபிஎல் ப்ரீமியர் லீக் இந்தியாவில் கோலகலமாக நடைபெற்று வருகிறது. எனினும் இதில் வீரர்கள் மட்டுமே பங்குபெற்று வந்தனர்.
இந்நிலையில் நடப்பாண்டு முதல் பெண்களுக்கான ப்ரீமியர் லீக்கும் நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் (WPL) அணிகளுக்கான ஏலம் இன்று மும்பையில் நடைபெற்றது.
ஆடவர் ஐபிஎல் தொடரில் 10 அணிகள் விளையாடி வரும் நிலையில் மகளிருக்கான ஐபிஎல் தொடரில் இந்தாண்டு அறிமுகமாகும் 5 அணிகளுக்கான ஏலமே இன்று நடைபெற்றது.
இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா அணிகளின் உரிமையாளர்கள் பங்கேற்கவில்லை.
எனினும் மகளிருக்கான பிரீமியர் லீக்கில் அறிமுகமாகும் 5 அணிகள் ரூ.4,669 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆடவர் ஐபிஎல் ஏலத்தின் சாதனையை மகளிர் பிரீமியர் லீக் முறியடித்துள்ளது.
முன்னதாக ஆடவர் ஐபிஎல் அறிமுகத்தின்போது 8 அணிகள் மொத்த ஏலமாக ரூ.2,893 கோடிக்கு மட்டுமே பிசிசிஐக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட்டில் நுழைந்த அதானி
இன்று நடைபெற்ற மகளிர் ஐபிஎல் அணி ஏலத்தில் மொத்தம் 17 ஏலதாரர்கள் ஈடுபட்டனர்.
அதில், இந்தியாவைச் சேர்ந்த உலக பணக்காரர்களில் ஒருவரான அதானி, அகமதாபாத் அணி உரிமையை ரூ. 1,289 கோடிக்கு பெற்றுள்ளார்.
ரிலையன்ஸ் குழுமத்தின் இந்தியா வின் நிறுவனம் மும்பை அணி உரிமையை ரூ.912.99 கோடிக்கு பெற்றுள்ளது.
அதே போல், ராயல் சேலஞ்சர்ஸ் குழுமம் ரூ. 901 கோடிக்கு பெங்களூரூ அணியையும், ஜே.எஸ்.டபிள்யூ. ஜி.எம்.ஆர். குழுமம் ரூ. 810 கோடிக்கு டெல்லி அணியையும், கேப்ரி குளோபல் நிறுவனம் ரூ. 757 கோடிக்கு லக்னோ அணி உரிமையையும் ஏலத்தில் பெற்றுள்ளன.
கிரிக்கெட்டில் இன்று ஒரு வரலாற்று நாள்
இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், 2008 ஆம் ஆண்டு அறிமுகமான இந்தியன் ப்ரீமியர் லீக்கின் ஏல சாதனையை மகளிருக்கான ஐபிஎல் ஏலம் முறியடித்ததால், கிரிக்கெட்டில் இன்று ஒரு வரலாற்று நாள்!
மொத்த ஏலத்தில் ரூ. 4669.99 கோடியை பிசிசிஐ பெற்றுள்ளது. வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள். இது பெண்கள் கிரிக்கெட்டில் ஒரு புரட்சிக்கு வழிவகுத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மகளிர் ஐபிஎல் அணிகளுக்கான ஏலத்தை தொடர்ந்து அதில் விளையாடும் வீராங்கனைகளுக்கான ஏலம் பிப்ரவரி முதல் வாரத்தில் நடைபெற உள்ளது.
இதற்காக 5 அணிகளின் உரிமையாளர்களுக்கும் தலா ரூ.12 கோடி வைத்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா