மகளிருக்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடருக்கான வீராங்கனைகள் ஏலம் மும்பையில் இன்று (பிப்ரவரி 13) நடைபெறவுள்ளது. பிசிசிஐ இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர் உலகளவில் பிரபலமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடரை போலவே பல நாடுகளும் தங்கள் நாட்டில் பிரீமியர் லீக் தொடர்களை நடத்துகிறது.
இதனிடையே, ஆடவருக்கான ஐபிஎல் போட்டிகளை போலவே மகளிருக்கான ஐபிஎல் போட்டிகளும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்த நிலையில் ஒருவழியாக இந்த ஆண்டு முதல் மகளிருக்கான ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 4ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
இதில், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, உத்தரப்பிரதேச வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்கின்றன.
இந்நிலையில், வீராங்கனைகளை தேர்வுசெய்வதற்கான ஏலம் மும்பையில் இன்று(பிப்ரவரி 13 ) நடைபெறுகிறது.
இதற்காக 1, 525 வீராங்கனைகள் பதிவுசெய்த நிலையில் இறுதிப் பட்டியலில் 246 இந்தியர்கள், 163 வெளிநாட்டினர் என 409 பேர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
இன்று மதியம் 2.30 மணிக்கு ஏலம் தொடங்கும் நிலையில், ஒவ்வொரு அணியும் 12 கோடி ரூபாய் வரை செலவு செய்யலாம். 5 அணிகளும் சேர்த்து 90 வீராங்கனைகளை தேர்வுசெய்யலாம். ஒவ்வொரு அணியும் வெளிநாடுகளைச் சேர்ந்த 6 வீராங்கனைகள் வரை தேர்வுசெய்து கொள்ள முடியும்.
இந்த ஏலத்தைப் பொருத்தவரை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா ஆகியோரை தேர்வுசெய்ய அணி நிர்வாகங்கள் போட்டிபோடும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
நயன்தாரா மீதான விமர்சனம் பற்றி மாளவிகா மோகனன் கொடுத்த பதில்!
களைகட்டும் காதலர் தினம்: விலையேறிய ரோஜா!