2024 மகளிர் பிரீமியர் தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்று (டிசம்பர் 9) நடைபெறவுள்ளது. மும்பையில், மாலை 3 மணிக்கு துவங்கவுள்ள இந்த ஏலத்தில், ஏலதாரராக மல்லிகா சாகர் (Mallika Sagar) செயல்பட உள்ளார்.
குஜராத் ஜெய்ன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல், உ.பி வாரியர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என 5 அணிகள் இந்த ஏலத்தில் பங்கேற்கவுள்ளது. இந்த 5 அணிகள் மொத்தமாக அதிகபட்சம் 30 வீராங்கனைகளை இன்று ஏலத்தில் எடுக்க உள்ளது. அந்த 30 இடங்களுக்காக, 104 இந்தியர்கள், 61 வெளிநாட்டு வீராங்கனைகள் என மொத்தம் 165 வீராங்கனைகள் போட்டி போட்டுக்கொள்ள உள்ளனர்.
குஜராத் ஜெய்ன்ட்ஸ்
ஒவ்வொரு அணிகளும் அதிகபட்சமாக 6 வெளிநாட்டு வீராங்கனைகளுடன், மொத்தம் 18 வீராங்கனைகளை அணியில் சேர்த்துக்கொள்ள அனுமதிக்கப்படுவர். அந்த வகையில், வெறும் 8 வீராங்கனைகளை மட்டுமே தக்கவைத்துக்கொண்டுள்ள குஜராத் அணி, இந்த ஏலத்தில் 3 வெளிநாட்டு வீராங்கனைகள் உட்பட 10 வீராங்கனைகளை ஏலத்தில் எடுக்க முயற்சிக்க உள்ளது.
மீதமுள்ள தொகை: ரூ.5.95 கோடி (மற்ற அணிகளுடன் ஒப்பிடுகையில், குஜராத் அணியே அதிக தொகையை கையில் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தக்கவைக்கப்பட்ட வீராங்கனைகள்: ஆஷ்லே கார்ட்னர், பெத் மூனி, தயாளன் ஹேமலதா, ஹர்லீன் டியோல், லாரா வால்வார்ட், ஷப்னம் ஷகில், ஸ்னே ரானா, தனுஜா கன்வெர்.
மும்பை இந்தியன்ஸ்
நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, தங்கள் அணியில் இருந்து வெறும் 4 வீராங்கனைகளை மட்டுமே விடுத்துவிட்டு, 14 வீராங்கனைகளை தக்கவைத்துக் கொண்டுள்ளது. தற்போது, அந்த அணியில் 13 வீராங்கனைகள் உள்ள நிலையில், 1 வெளிநாட்டு வீராங்கனை உட்பட 5 வீராங்கனைகளுக்காக மும்பை அணி ஏலத்தில் பங்குபெற உள்ளது.
மீதமுள்ள தொகை: ரூ.2.1 கோடி
தக்கவைக்கப்பட்ட வீராங்கனைகள்: அமஞ்சோத் கவுர், அமீலியா கெர், சோலே ட்ரையான், ஹர்மன்ப்ரீத் கவுர், ஹேலே மேத்யூஸ், ஹுமைரா காசி, இசபெல்லா வாங், ஜிந்திமணி கலிடா, நடாலி சிவர், பூஜா வஸ்திரகர், ப்ரியங்கா பாலா, சைகா இஷக், யாஸ்திகா பாட்டியா
டெல்லி கேபிட்டல்ஸ்
2023 மகளிர் பிரீமியர் தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறி தோல்வியை சந்தித்த டெல்லி கேப்பிடல் அணி, வெறும் 3 வீராங்கனைகளை மட்டுமே விடுவித்துவிட்டு, மற்ற அனைத்து வீராங்கனைகளையும் தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஒரு வெளிநாட்டு வீராங்கனை உட்பட 3 வீராங்கனைகளுக்கு டெல்லி அணியில் இடமுள்ள நிலையில், அந்த அணி தன் கணக்கில் ரூ.2.25 கோடியை மீதம் வைத்துள்ளது. இதனால், பல அணிகளின் கனவை டெல்லி அணி இந்த ஏலத்தில் தகர்க்கும் என எதிர்பார்க்கலாம்.
மீதமுள்ள தொகை: ரூ.2.25 கோடி
தக்கவைக்கப்பட்ட வீராங்கனைகள்: அலைஸ் கேப்சி, அருந்ததி ரெட்டி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஜெஸ் ஜொன்சேன், லாரா ஹாரிஸ், மரியானா கப், மெக் லென்னிங், மின்னு மணி, பூனம் யாதவ், ராதா யாதவ், ஷபாலி வர்மா, ஷிகா பாண்டே, சினேகா தீப்தி, தனியா பாட்டியா, டிடாஸ் சது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ஸ்மிருதி மந்தனா, எல்லிஸ் பெர்ரி, சோபி டிவைன், ஹெதர் நைட், ரேணுகா சிங் என அணியில் பல அதிரடி வீராங்கனைகள் இருந்தும், 2023 மகளிர் பிரீமியர் தொடரில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பெரிய மாற்றங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. மேகன் சூட் உட்பட 7 வீராங்கனைகளை விடுவித்துள்ள இந்த அணி, இன்றைய ஏலத்தில் 3 வெளிநாட்டு வீராங்கனைகள் உட்பட 7 வீராங்கனைகளுக்கு குறி வைக்க உள்ளது.
மீதமுள்ள தொகை: ரூ.3.35 கோடி
தக்கவைக்கப்பட்ட வீராங்கனைகள்: ஆஷா சோபனா, திஷா கசட், எல்லிஸ் பெர்ரி, ஹெதர் நைட், இந்திராணி ராய், கனிகா அஹுஜா, ரேணுகா சிங், ரிச்சா கோஷ், ஸ்ரேயன்கா படேல், ஸ்மிருதி மந்தனா, சோபி டிவைன்.
உ.பி வாரியர்ஸ்
கடந்த மகளிர் பிரீமியர் தொடரில் சர்ப்ரைஸ் பேக்கேஜாக வந்த உ.பி வாரியர்ஸ், 13 வீராங்கனைகளை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இன்றைய ஏலத்தில் 1 வெளிநாட்டு வீராங்கனை உட்பட 5 வீராங்கனைகளுக்காக மற்ற 4 அணிகளுடன் போட்டிபோட உள்ளது.
மீதமுள்ள தொகை: ரூ.4.0 கோடி
தக்கவைக்கப்பட்ட வீராங்கனைகள்: அலிஷா ஹீலி, அஞ்சலி சர்வானி, தீப்தி சர்மா, கிரேஸ் ஹாரிஸ் கிரண் நவ்கிரே, லாரன் பெல், லட்சுமி யாதவ், பர்ஷவி சோப்ரா, ராஜேஸ்வரி கெய்க்வாத்,எஸ்.யஷாஸ்ரீ, ஸ்வேதா செராவத், சோபி எக்லெஸ்டைன், தஹிலா மெக்ராத்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மகிழ்
த்ரிஷா மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்த மன்சூர் அலிகான்
IPL2024: பணத்தால விசுவாசத்தை வெலைக்கு வாங்க முடியாது… சென்னை வீரருக்கு வலை விரிக்கும் அணிகள்?