MI Women vs RCBW -Eliminator : டெல்லி அணி ஏற்கெனவே நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துவிட்ட நிலையில், இன்று (மார்ச் 15) நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் – ஆர்சிபி மகளிர் அணிகள் மோதுகின்றன.
மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் கடந்த 13ஆம் தேதி நடைபெற்ற 20ஆவது மற்றும் கடைசி லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.
இதில் டெல்லி அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 9 விக்கெட்டுக்கு 126 ரன்கள் மட்டுமே குவித்தது குஜராத் அணி. தொடர்ந்து விளையாடிய டெல்லி அணி, ஷபாலி வர்மா மற்றும் ஜெமிமா ரொட்ரிகியூஸின் அதிரடி ஆட்டத்தால் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் தொடர்ந்து 2வது ஆண்டாக இறுதிப்போட்டிக்குள் நேரடியாக நுழைந்து அந்த அணி சாதனை படைத்துள்ளது.
மும்பை அணி ஆதிக்கம்!
இந்த நிலையில் டெல்லி அணியுடன் மோதப்போகும் எதிரணி யார் என்பதை தீர்மானிக்கும் எலிமினேட்டர் ஆட்டம் டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
இதில் புள்ளிப்பட்டியலில் 2வது மற்றும் 3வது இடங்களை பிடித்துள்ள மும்பை இந்தியன்ஸ் மகளிர் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேராக 4 முறை மோதியுள்ள நிலையில், அதில் 3 ஆட்டங்களில் மும்பை அணியும், ஒரு முறை பெங்களூரு அணியும் வென்றுள்ளன.
கோப்பையை தக்க வைக்க போராடுமா மும்பை!
கடந்த ஆண்டு தொடங்கிய முதல் மகளிர் பிரிமீயர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லியுடன் மோதிய மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த நிலையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் வென்று இறுதிப்போட்டியில் டெல்லியை வீழ்த்தி கோப்பையை தக்க வைக்க வேண்டும் என்பதே ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான நடப்பு சாம்பியன் மும்பை அணியின் நோக்கமாக இருக்கும்.
அதே வேளையில் முதன்முறையாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ள ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு அணியும் கோப்பையை குறிவைக்கும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 ஹச்டி தொலைக்காட்சிகளில் ரசிகர்கள் நேரலையாக கண்டுகளிக்கலாம். அதேபோல் ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இப்போட்டியை ரசிகர்கள் இலவசமாக காணலாம்.
ஆடும் 11 வீராங்கனைகள் விவரம்!
மும்பை மகளிர்: ஹர்மன்பிரீத் கவுர் (கே), யாஸ்திகா பாட்டியா, ஹீலி மேத்யூஸ், நாட் ஸ்கைவர்-பிரண்ட், அமெலியா கெர், எஸ் சஜனா, அமன்ஜோத் கவுர், பூஜா வஸ்த்ரகர், ஹுமைரா காசி, ஷப்னிம் இஸ்மாயில், சைகா இஷாக்.
பெங்களூரு மகளிர்: ஸ்மிருதி மந்தனா (கே), எல்லிஸ் பெர்ரி, சோஃபி டிவைன், ரிச்சா கோஷ், சோஃபி மோலினக்ஸ், ஜார்ஜியா வேர்ஹாம், திஷா கசத், ஸ்ரேயங்கா பாட்டீல், ஷ்ரத்தா போகர்கர், ஆஷா சோபனா, ரேணுகா தாக்கூர் சிங்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
விற்பனைக்கு வரும் Xiaomi-யின் முதல் எலக்ட்ரிக் கார் : சிஇஓ சொன்ன ரகசியம்!
இலங்கை இயக்குனரின் படத்தில் மணிரத்னம்?