2024 மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 18வது லீக் போட்டியில் குஜராத் ஜெய்ன்ட்ஸ் அணியும் உ.பி வாரியர்ஸ் அணியும் மோதிக்கொண்டன. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் ஆகிய அணிகள் ஏற்கனவே நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிவிட்டன.
இந்நிலையில், மீதமுள்ள ஒரு இடத்திற்காக குஜராத், உ.பி மற்றும் பெங்களூரு அணிகள் போட்டிபோட்டுக்கொள்ளும் நிலையில், வெற்றி தேவை என்ற கட்டாயத்திலேயே இரு அணிகளும் இப்போட்டியில் களம் கண்டன.
இப்போட்டியில், முதலில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து களமிறங்கிய லாரா வால்வார்ட் மற்றும் கேப்டன் பெத் மூனி, குஜராத் அணிக்கு தேவையான துவக்கத்தை அளித்தனர். லாரா வால்வார்ட் 30 பந்துகளில் 43 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
ஆனால், அடுத்து வந்த அனைவரும் சொற்ப ரன்களுக்கு வெளியேற, இதன் காரணமாக 20 ஓவர்களில் குஜராத் அணி 152 ரன்களை மட்டுமே சேர்த்தது. பெத் மூனி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 74 ரன்கள் விளாசி இருந்தார். உ.பி அணிக்காக சோஃபி எக்லெஸ்டோன் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
153 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய உ.பி வாரியர்ஸ் அணிக்கு கேப்டன் அலைசா ஹீலி உட்பட அனைவருமே அடுத்தடுத்து ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.
ஆனால், 5வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த தீப்தி சர்மா மற்றும் பூனம் கேம்னார் சீராக அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். இந்த இணை கடைசி வரை களத்தில் நின்று போராடியபோதும், உ.பி அணியால் 20 ஓவர்கள் முடிவில் 144 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதன்மூலம், குஜராத் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில், இந்த தொடரில் மீண்டும் ஒரு த்ரில் வெற்றியை பதிவு செய்தது. தீப்தி சர்மா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 88 ரன்கள் சேர்த்திருந்தார்.
குஜராத் அணிக்காக 4 ஓவர்களில் 11 ரன்கள் மட்டுமே வழங்கி 3 விக்கெட்களை கைப்பற்றிய ஷப்னம் ஷகீல் ‘ஆட்ட நாயகி’ விருதை வென்றார்.
RCB அணிக்கு வாய்ப்பு இருக்கா? WPL 2024 GG beats UPW by 8 runs
உ.பி வாரியர்ஸ் அணியின் இந்த தோல்வி காரணமாக, புள்ளி பட்டியலில் 3வது இடத்திலேயே தொடரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான தனது கடைசி லீக் போட்டியில் வென்றாலே நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிவிடலாம் என்ற வாய்ப்பை பெற்றுள்ளது.
மறுமுனையில், இப்போட்டியில் பெங்களூரு அணி மிக மோசமான ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாலே, உ.பி வாரியர்ஸ் அணிக்கு நாக்-அவுட் வாய்ப்பு கிடைக்கும்.
தற்போது, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள குஜராத் ஜெய்ன்ட்ஸ் அணி, ஒருவேளை தனது கடைசி லீக் ஆட்டத்தில் அபாரமாக வெற்றி பெற்று, பெங்களூரு அணி தனது கடைசி லீக் போட்டியில் மிக மோசமாக தோற்கும் பட்சத்தில், அந்த அணிக்கும் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பொன்முடிக்கு உண்டு… விசாலாட்சிக்கு இல்லை… உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் முழு விவரம்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
WPL 2024 GG beats UPW by 8 runs