குஜராத் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியிலும் வென்ற டெல்லி அணி, தொடர்ந்து 2வது ஆண்டாக இறுதிப்போட்டிக்குள் நேரடியாக நுழைந்து சாதனை படைத்துள்ளது. Delhi capitals move to the final
மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் நேற்று (மார்ச் 13) நடைபெற்ற 20ஆவது மற்றும் கடைசி லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட்டுக்கு 126 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் பெத் மூனி (0) மற்றும் வால்வார்ட் (7) என அதிர்ச்சியுடன் வெளியேறிய நிலையில், புல்மாலி அதிகபட்சமாக 42 ரன்கள் குவித்தார்.
டெல்லி அணி தரப்பில் மரிசன்னே கப், சிகா பாண்டே மற்றும் மின்னு மனி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
அதனைத்தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணி 13.1 ஓவரில் பவுண்டரி அடித்து 129 ரன்களுடன் வெற்றி இலக்கை எட்டியது.
அந்த அணியில் கேப்டன் லானிங் 18 ரன்களில் ஆட்டமிழந்த போதும், 7 பவுண்டரி, 5 சிக்சருடன் 71 ரன்கள் குவித்த ஷபாலி வர்மா மற்றும் 38 ரன்கள் அடித்த ஜெமிமா ரொட்ரிகியுஸின் அதிரடியான ஆட்டத்தால் அட்டகாச வெற்றியை பதிவு செய்தது.
இந்த வெற்றியின் மூலம் 12 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்கவைத்த டெல்லி அணி, தொடர்ந்து 2வது ஆண்டாக இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது.
இந்த நிலையில் நாளை (மார்ச் 15) நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் – ஆர்சிபி மகளிர் அணிகள் மோதுகின்றன.
இதில் வெற்றி பெறும் அணியே, வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் டெல்லியை எதிர்கொள்ளும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
விற்பனைக்கு வரும் Xiaomi-யின் முதல் எலக்ட்ரிக் கார் : சிஇஓ சொன்ன ரகசியம்!
இலங்கை இயக்குனரின் படத்தில் மணிரத்னம்?