WPL 2024: கடைசி பந்தில் த்ரில் வெற்றி.. நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய டெல்லி!
Delhi Capitals beat Royal Challengers
2024ஆம் ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 17வது லீக் சுற்று ஆட்டத்தில், டெல்லி கேப்பிடல்ஸ் மகளிர் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணியும் மோதிக்கொண்டன.
நாக்-அவுட் சுற்றுக்கு முதல் அணியாக நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி தகுதி பெற்றிருந்த நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் நாக்-அவுட் வாய்ப்பு பிரகாசம் என்ற சூழலிலேயே, 2 அணிகளும் களம் கண்டன. இப்போட்டியில், முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதை தொடர்ந்து அந்த அணிக்காக களமிறங்கிய கேப்டன் மெக் லான்னிங் மற்றும் ஷபாலி வர்மா ஒரு நல்ல துவக்கத்தை வழங்கினர். லான்னிங் 29 ரன்களுக்கும், ஷபாலி வர்மா 23 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அடுத்து ஜோடி சேர்ந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் அலைஸ் கேப்ஸி, ஆட்டத்தின் போக்கை அதிரடிக்கு மாற்றினர்.
அரைசதம் விளாசிய ஜெமிமா 58 ரன்களுக்கும், கேப்ஸி 48 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 181 ரன்கள் சேர்த்தது. பெங்களூரு அணிக்காக ஷ்ரெயன்கா பட்டேல் 4 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார்.
182 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணிக்கு, ஸ்மிருதி மந்தனா 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தும், அடுத்து ஜோடி சேர்ந்த சோபி மோலினியூக்ஸ் மற்றும் எல்லிஸ் பெர்ரி பொறுப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
பெர்ரி 49 ரன்களுக்கும், மோலினியூக்ஸ் 33 ரன்களுக்கும் வெளியேற, அடுத்து வந்த சோபி டிவைன் மற்றும் ரிச்சா கோஷ் இந்த பொறுப்பான ஆட்டத்தை தொடர்ந்து, அணியை எண்ணிக்கையை வெற்றி இலக்கை நோக்கி நகர்த்தினர்.
சோபி டிவைன் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தபோதும், ரிச்சா கோஷ் களத்தில் நின்று தொடர்ந்து போராடினார். கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற நிலையில், ரிச்சா கோஷ் விளாசிய 2 சிக்ஸர்களால், 1 பந்தில் 2 ரன்கள் தேவை என, போட்டி சுவாரஸ்ய கட்டத்தை எட்டியது.
ஆனால், கடைசி பந்தில் ரிச்சா கோஷ் ரன்-அவுட் ஆக, டெல்லி அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது. 8 பவுண்டரி, 1 சிக்ஸுடன், அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 58 ரன்கள் குவித்த ஜெமிமா ரோட்ரிக்ஸ், இந்த போட்டிக்கான ஆட்ட நாயகி விருதை வென்றார்.
இந்த போட்டியில் தோல்வியடைந்ததன் காரணமாக, நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற தனது கடைசி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு பெங்களூரு அணி தள்ளப்பட்டுள்ளது.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேலைவாய்ப்பு: ரயில்வே துறையில் பணி!
மாஸ் காட்டிய கிறிஸ்டோபர் நோலன்: ஆஸ்கர் விருது முழு விவரம் இதோ!
Delhi Capitals beat Royal Challengers