ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 கிரிக்கெட் போட்டி அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் துவங்குகிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா அணி, கோப்பையை தக்கவைக்க களமிறங்கும்.
அதே வேளையில் அதற்கு போட்டியாக இந்தியா உட்பட உலகின் டாப் 12 அணிகள் கோப்பையை வெல்ல பலப்பரீட்சை நடத்த உள்ளது.
இந்நிலையில், திரில்லர் போட்டிகளுடன் விறுவிறுப்பாக நடைபெறப் போகும் இந்த தொடரில் அம்பயர்களின் பட்டியலை ஐசிசி சமீபத்தில் வெளியிட்டிருந்தது.
முதல் மற்றும் சூப்பர் 12 சுற்று போட்டிகளை மொத்தம் 16 நடுவர்கள் நடத்துவார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அரையிறுதி மற்றும் பைனல் போட்டிகளுக்கான நடுவர்களின் பெயர்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
இருப்பினும் இந்த பட்டியலில் இலங்கையைச் சேர்ந்த பிரபல அம்பயர் குமார தர்மசேனா மீண்டும் இடம் பெற்றுள்ளது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் 2019 உலக கோப்பை பைனலில் இங்கிலாந்து வீரர் ’பென் ஸ்டோக்ஸ்’ பேட்டில் பந்து பட்டு சென்றதற்காக 5 ரன்களை மட்டும் வழங்க வேண்டிய அவர், 6 ரன்களை கொடுத்தது இங்கிலாந்துக்கு சாதகமாகவும் நியூசிலாந்துக்கு பாதகமாகவும் அமைந்தது.

அதேபோல் 2019ம் ஆண்டு மும்பைக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் தொடரில் இரண்டாவது ரன்னிற்காக கோட்டை தொட்ட பிறகும் பஞ்சாப் அணிக்கு ஒரு ரன் மட்டுமே வழங்கினார்.
அதுபோல், 2022 ஆம் ஆண்டு டெல்லி அணிக்கும் ராஜஸ்தான் அணிக்கும் நடைபெற்ற தொடரில் ’ரோவ்மன் போவலுக்கு’ இடுப்புக்கு மேலே வீசப்பட்ட பந்தை நோ-பால் என அறிவிக்காததால் ரசிகர்களின் அதிருப்திக்கு ஆளானார்.
ஆனாலும் அவருக்கு ஐசிசி தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறது. அந்த ஆதரவுடன் ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்ட புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார், தர்மசேனா.
அந்த பதிவை பார்த்த ரசிகர்கள், இந்த முறையாவது நியாயமாக நடந்து கொள்ளுமாறு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

நவீன டெக்னாலஜி இருந்தும் சமீப காலங்களில் இது போன்ற அம்பயர்கள் குளறுபடிகளை செய்து வரும் நிலையில்,
’ஜோயல் வில்சன்’ போன்ற மேலும் சில ஏடாகூட அம்பயர்களும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளதால் இந்த உலக கோப்பையில் என்னவெல்லாம் குளறுபடிகள் நடக்கப் போகிறதோ என ரசிகர்கள் இப்போதே கலக்கம் அடைந்துள்ளனர்.

ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான போட்டி நடுவர்கள்: ஆண்ட்ரூ பைகார்ட், கிறிஸ் ப்ராட், டேவிட் பூன், ரஞ்சன் மடுகள்லே கள நடுவர்கள்:
அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக், அலீம் தார், அஷன் ராஜா, கிரிஸ்டோல்பர் பிரவுன், கிறிஸ்டோல்பர் கேஃப்னி, ஜோயல் வில்சன், குமார தர்மசேனா, லாங்டன் ரூசர்,
மறைஸ் எரஸ்மஸ், மைக்கேல் கௌவ், நிதின் மேனன், பால் ரெய்பல், பால் வில்சன், ரிச்சர்ட் இல்லிங்வொர்த், ரிச்சர்ட் கெட்டல்போர்க், ராட் டக்கர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஆன்லைன் சூதாட்டத் தடை: மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்
3 சிறுவர்கள் உயிரிழப்பு: முதலமைச்சர் நிவாரணம்!