WorldCup2023: ரோஹித்தின் கைகளிலிருந்து, மார்ஷின் கால்களுக்கு போன உலகக்கோப்பை… காரணம் இதுதான்!

Published On:

| By Aara

அரவிந்தன்

உலகக்கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா தோற்றது குறித்து ஆராயும்போது, டாஸ் முதலான நமது கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களை பற்றி விவாதிப்பதில் பொருள் இல்லை.

அணியின் முக்கியமான பிரச்சினை மட்டையாளர்களிடம் உள்ளது. எக்கச்சக்கமாக ரன் குவித்த, எவ்வளவு ரன்னாக இருந்தாலும் சேஸ் செய்யக்கூடிய இதே மட்டையாட்ட அணியைத்தான் குறிப்பிடுகிறேன். இந்த அணியில் உள்ள முதல் ஐவர் சிறப்பாக ஆடி வருகிறார்கள்.

ஆனால் ஆறாவது, ஏழாவது ஆட்டக்காரர்கள் அந்த அளவிற்கு தங்கள் திறனை நிரூபிக்கவில்லை அல்லது முதல் ஐவரோடு எந்த வகையிலும் ஒப்பிடக்கூடிய அளவில் அவர்களுடைய தற்போதைய ஆட்ட நிலையோ, திறமையோ இல்லை. இப்படி நான் சொல்லும்போது சூர்யகுமார் யாதவையும், ரவீந்திர ஜடேஜாவையும் குறைத்துச் சொல்வது போலத் தோன்றும்.

ஆனால் இதைத் தெளிவாக நாம் புரிந்து கொள்ள ஒரு ஒப்பீடு இங்கே அவசியமாகிறது. 2011-ல் இந்தியா உலகக்கோப்பையை வென்றபோது இருந்த முதல் 7 பேரை பாருங்கள். சச்சின், சேவாக், காம்பீர், விராட் கோலி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, மகேந்திர சிங் தோனி. இந்த எழுவரோடு ஒப்பிடும் வகையில் இப்போது உள்ள எழுவர் இருக்கிறார்களா?

முதல் ஐவரை ஒப்பிடலாம். ஆனால் ஆறு, ஏழு ஆட்டக்காரர்கள் அந்த நிலையில் இருக்கிறார்களா? முதல் ஐவர் சிறப்பாக ஆடும்போது ஆறாம், ஏழாம் ஆட்டக்காரர்களின் குறைபாடு நமக்கு தெரிவதில்லை. முதல் ஐவர் சரியாக ஆடாதபோது தான் அவர்களின் பலம் அல்லது பலவீனம் வெளிப்படும்.

கடந்த உலகக்கோப்பையின் போது முதல் ஐவரில் இருவரோ, மூவரோ சறுக்கியபோது ரெய்னாவும், தோனியும் கை கொடுத்தார்கள். இந்த முறை எல்லா ஆட்டங்களிலும் முதல் ஐவரில் மூவரேனும் சிறப்பாக ஆடிவிட்டதால் கீழ்-இடைநிலை அணியின் பலவீனம் வெளியில் தெரியவில்லை.

இறுதி ஆட்டத்தில் ஷுப்மன் கில் விரைவில் ஆட்டமிழந்தார். வழக்கம்போல் அதிரடி காட்டிய ரோஹித் அதிரடியில் தேவைக்கு மேல் அழுத்தம் கொடுத்ததில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஷ்ரேயாஸும் விரைவில் ஆட்டமிழந்தார். இதனால் அதுவரை வேகமாக ஆடிவந்த விராட் கோலி அதன் பிறகு ‘கவனம்’ என்னும் கவசத்தைப் பூட்டிக்கொண்டு மெதுவாக ஆட ஆரம்பித்தார்.

அவருடன் இணை சேர்ந்த ராகுலும் அதையே செய்தார். பந்து மெதுவாக வந்தது, பந்துவீச்சு நன்றாக இருந்தது என்ற காரணங்களை எல்லாம் தாண்டி கோலி, ராகுல் ஆகியோரால் கண்டிப்பாக ஒரு ஓவருக்கு ஐந்து ரன் எடுக்க முடியும். எந்தச் சூழலிலும் ஒற்றை, இரட்டை என ரன்களை அடிக்க முடியும். அவர்களுடைய திறமை, அவர்களுடைய தற்போதைய ஆட்டத்திறன் ஆகிய இரண்டும் இதற்கு உறுதி கூறுகின்றன.

இருந்தும் அவர்கள் இப்படி ஆடாமல் இருந்ததற்கு, இன்னும் ஒரு விக்கெட் விழுந்தாலும் மீதி உள்ள 25 ஓவர்களில் ஆடுவதற்கு ஆளில்லை என்ற அச்சமே காரணம். சூர்யகுமாரையும், ஜடேஜாவையும் வைத்துக்கொண்டு அடுத்து வரும் 25 ஓவரை எப்படி ஆடுவது? என்று கவலை அவர்கள் மனதில் இருந்திருக்கிறது என்பது உறுதியாகிறது.

ஆனால் சுரேஷ் ரெய்னாவோ, தோனியோ இருந்தபோது காம்பீர், கோலி, யுவராஜ் சிங் ஆகியோருக்கு இந்த கவலை வந்திருக்குமா? முதலில் ஆடும் ஐவரும் தம்முடைய இயல்பான ஆட்டத்தை ஆடுவதற்கான சுதந்திரத்தை கடைசியில் வரும் இருவர் கொடுக்கிறார்கள். அந்த சுதந்திரத்தை இன்று கடைசியில் உள்ள இருவர் கொடுக்கவில்லை என்பது வெளிப்படை.

இந்த ஒற்றைப் புள்ளியில்தான் இருக்கிறது இந்தியாவின் மொத்த தோல்விக்கான காரணம். 2011-ம் ஆண்டு அணியில் விக்கெட் கீப்பரோடு சேர்த்து ஏழு மட்டையாளர்கள் இருந்தார்கள். இப்போது விக்கெட் கீப்பரோடு சேர்த்து ஆறு மட்டையாளர்கள்தான் இருக்கிறார்கள். ஆறாவது இடத்தில் இருக்கும் சூர்யா அன்றைய ரெய்னா அல்ல.

ஏழாவது மட்டையாளரின் இடத்தில் இருக்கும் ஜடேஜா அன்றைய ஏழாம் ஆட்டக்காரர் தோனியோடு ஒப்பிடக்கூடியவரல்ல. இதுதான் கோப்பையை காவு வாங்கிய பலவீனம். ஒருநாள் போட்டிகளில் நான்கு பந்துவீச்சாளர்கள் போதாது. மீதி உள்ள 10 ஓவர்களை வீசுவதற்கு ஒருவர் வேண்டும்.

அந்த காலத்தில் பகுதி நேர பந்துவீச்சாளர்களாக சச்சின், சேவாக், யுவராஜ் சிங் ஆகியோர் இருந்தார்கள். இப்போது பகுதி நேர பந்துவீச்சாளர்கள் என்ற வகையே ஒழிந்து விட்டது. ஆகவே ஐந்து பந்துவீச்சாளர்களை வைத்துக்கொண்டு ஆட வேண்டியிருக்கிறது. அதில் ஒருவர் ஆல்ரவுண்டராக இருக்க வேண்டும் என்பதால் ஜடேஜாவை சேர்க்கிறார்கள்.

களத்தடுப்பிலும் சிறப்பாக விளங்குவது அவருக்குக் கூடுதல் சாதகமாகிறது. ஆனால், ஏழாம் நிலையில் களமிறங்கும் தோனி போன்ற ஒருவர் ஏற்படுத்தும் தாக்கத்தை அவரால் ஏற்படுத்தவே முடியாது. நவம்பர் 19 அன்று ஏழாவது இடத்தில் தோனியைப் போன்ற மட்டையாளர் இருந்திருந்தால், சூர்யகுமாரின் இடத்தில் ரெய்னா போன்ற ஒருவர் இருந்திருந்தால் கோலியும், ராகுலும் அப்படி ஆடியிருக்க மாட்டார்கள்.

360 கோணங்களிலும் ரன் அடிக்கும் 20 ஓவர் நாயகன் சூர்யகுமார் இதுவரை 50 ஓவர் ஆட்டத்தில் நீண்ட இன்னிங்ஸ் ஆடியதில்லை. இந்நிலையில் அவரை நம்பி அடுத்த 25 ஓவரை எப்படி தள்ளுவது? என்ற யோசனை மூத்த ஆட்டக்காரர்களான கோலிக்கும், ராகுலுக்கும் வருகிறது.

எனவே இருவரும் தம்முடைய இயல்பை மீறி மெதுவாக ஆடுகிறார்கள். அதன் மூலம் இந்தியா 30 அல்லது 40 ரன்களை இழக்கிறது. அதன் பிறகு சூர்ய குமார் உள்ளே வந்த பிறகும் அவரால் தாக்கம் உள்ள இன்னிங்ஸை ஆட முடியவில்லை. பந்து வீச்சாளருக்கு சாதகமான சூழ்நிலையில் அவருடைய பலவீனம் அம்பலமானது. நெருக்கடியில் இருக்கும்போது அவரால் தன் இயல்பான திறனை வெளிப்படுத்த முடியவில்லை.

அவருக்கு முன்பு ஜடேஜாவை அனுப்பியது கூட ஜடேஜா அவரைக் காட்டிலும் அதிக நேரம் தாக்குப்பிடிப்பார் என்பதற்காகத்தான். அணியின் தலைமையும், மூத்த ஆட்டக்காரர்களும் சூர்யாவின் மீது வைத்திருக்கும் மதிப்பு இதுதான் என்றால் அவரை ஏன் அணியில் வைத்திருக்க வேண்டும்?

அவரைக் காட்டிலும் நீண்ட இன்னிங்ஸ் ஆடி ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்து தன் திறனை நிரூபித்திருக்கும் இஷான் கிஷனை ஏன் அவருடைய இடத்தில் சேர்த்திருக்கக் கூடாது? சூர்யகுமார் யாதவை முதலிலேயே அனுப்பி ஐந்து ஓவர் ஆடினாலும் தாக்கம் மிகுந்த இன்னிங்ஸை ஆடுமாறு சொல்லி அனுப்பி இருக்கலாம்.

20, 25 பந்துகளில் 30, 35 ரன் அடித்திருந்தால் அதனால் ரன் விகிதம் உயர்ந்திருக்கும். அதன் பிறகு ஜடேஜாவும் இன்னொரு மட்டையாளரும் சேர்ந்து அடுத்த 20 அல்லது 15 ஓவர்களில் ஒற்றை, இரட்டை ரன்கள் அடித்து அணியின் எண்ணிக்கையை 300-க்கு அருகில் கொண்டு வந்திருப்பார்கள்.

ஆறாவது, ஏழாவது மட்டையாளர்கள் வலுவாக இல்லை என்பதும், சூர்யகுமார் யாதவின் திறமையை சரியாகப் பயன்படுத்த அன்று அணித்தலைமை தவறியதும் இந்தியாவால் கூடுதலாக 30 முதல் 50 ரன்கள் அடிக்க முடியாமல் போனதற்கு காரணம். இதுவே இந்தியாவின் தோல்விக்கும் காரணம்.

சூர்யகுமார் யாதவுக்கு பதில் ரிஷப் பந்த் அல்லது இஷான் கிஷன் அணியில் இருந்திருந்தால் கோலி, ராகுலின் அணுகுமுறை கண்டிப்பாக மாறுபட்டதாக இருந்திருக்கும். ராகுல் 50-க்கு பக்கமாக ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியிருக்கவே மாட்டார். பந்த் அல்லது இஷானும் கூடுதலாக ரன் அடித்திருக்கக்கூடும்.

எனவே, சூர்யகுமாரின் தேர்வும் பகுதி நேரப் பந்துவீச்சாளர் இல்லாததால் ஏழாவது இடத்தில் வலுவான மட்டையாளரை தேர்ந்தெடுக்க முடியாமல் இருப்பதும் தான் இந்தியா தோற்க காரணம். அதுவே இந்தியாவின் தற்போதைய பலவீனம். இந்த பலவீனங்களை மீறியும் இந்தியா பத்து போட்டிகளில் வரிசையாக வென்றதற்கு காரணம் முதல் ஐவரின் சிறப்பான ஆட்டமும், அதைவிட சிறப்பான பந்துவீச்சும் தான்.

இவை இரண்டில் ஏதேனும் ஒன்று கைவிடும் போது கை கொடுத்துத் தூக்கி விட வேண்டிய வலுவான கீழ்-இடைநிலை அணி, பகுதிநேர பந்து வீச்சாளர்கள் ஆகியோரின் இன்மையே உலகக் கோப்பையை ரோஹித்தின் கைகளிலிருந்து மார்ஷின் கால்களுக்கு கீழே கொண்டு போய்ச் சேர்த்திருக்கிறது. இந்த பலவீனத்தை சரி செய்யாவிட்டால் கோப்பைகள் கை நழுவிப்போவது தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-அரவிந்தன் 

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு கருங்காலி மாலை கொடுத்த நேரு

துபாயில் செட்டில் ஆன யுவன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel