மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (நவம்பர் 15) நடைபெற்ற முதலாவது செமி பைனல் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது. worldcup2023 indvsnz semi final
இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோஹித்தின்(47) அதிரடி, கோலியின்(117) 50-வது சதம், சுப்மன் கில்லின் 80 ரன்கள் பங்களிப்பு, ஷ்ரேயாஸ் ஐயரின்(105) சதம் ஆகியவற்றால் 50 ஓவர்கள் முழுமையாக விளையாடி 397 ரன்களை குவித்தது.
தொடர்ந்து இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 327 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குறிப்பாக இந்திய வீரர் ஷமி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு வலுவான அடித்தளமிட்டார்.
நேற்றைய போட்டியில் இந்திய வீரர்கள் கோலி, ஷமி, ரோஹித் செய்த புதிய சாதனைகள் அவர்கள் உடைத்த ரெக்கார்டுகள் ஆகியவற்றை இங்கே காணலாம்.
விராட் கோலி
- சமீபத்தில் தனது பிறந்தநாள் (நவம்பர் 5) பரிசாக சதமடித்து சச்சின் சாதனையை சமன் செய்த கோலி, நேற்று மீண்டும் ஒரு சதமடித்து ஒருநாள் போட்டிகளில் 50-வது சதம் என்ற மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார்.
- இந்த தொடரில் இதுவரை 711 ரன்களை கோலி குவித்துள்ளார். இதன் மூலம் ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த முதல் வீரர் என்னும் பெருமை கோலிக்கு கிடைத்துள்ளது.
- இதுதவிர 50 ஓவர் உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை, ஐபிஎல் தொடர் ஆகியவற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர் எனும் புதிய சாதனையையும் கோலி படைத்துள்ளார்.
- கடந்த 2003 உலகக்கோப்பை தொடரில் 7 முறை சச்சின் டெண்டுல்கர் 50+ அடித்ததே அதிகபட்ச சாதனையாக இருந்தது. அதனையும் நடப்பு தொடரில் விராட் கோலி (8 முறை) உடைத்துள்ளார்.
- அனைத்து பார்மேட்டுகளிலும் சேர்த்து தன்னுடைய 80-வது சதத்தை சச்சின் 635 இன்னிங்ஸ்கள் விளையாடி எடுத்திருந்தார். அவரது இந்த சாதனையை 573 இன்னிங்ஸ்களில் கோலி படைத்துள்ளார்.
ரோஹித் ஷர்மா
- நாக் அவுட் போட்டிகளில் நியூசிலாந்து அணியை இந்தியா வீழ்த்தியதில்லை என்னும் பழைய ரெக்கார்டை தன்னுடைய கேப்டன்ஷிப்பில் ரோஹித் மாற்றி எழுதியுள்ளார்.
- உலகக்கோப்பை தொடர்களில் அதிக சிக்ஸர்கள் அடித்த கிறிஸ் கெயிலின் (49) சாதனையை ரோஹித் 51 சிக்ஸர்களுடன் முந்தியுள்ளார். மேலும் இந்த 2023 தொடரில் இதுவரை அவர் 28 சிக்ஸர்களை அடித்துள்ளார்.
- கபில்தேவ் (1983), சவுரவ் கங்குலி (2003), எம்எஸ் தோனி (2011) ஆகிய இந்திய கேப்டன்களுக்கு பின்னர் இந்திய அணியை உலகக்கோப்பை பைனலுக்கு அழைத்து சென்ற 4-வது கேப்டன் என்ற பெருமை ரோஹித்துக்கு கிடைத்துள்ளது.
- ரோஹித் சர்மா தலைமையின் கீழ் இந்திய அணி இந்த உலகக்கோப்பை தொடரில் விளையாடிய 10 போட்டிகளிலும் வென்று புதிய சாதனை படைத்துள்ளது. worldcup2023 indvsnz semi final
முகமது ஷமி
- இந்த உலகக்கோப்பை தொடரில் வெறும் 14 இன்னிங்ஸ்களில் 50 விக்கெட்டுகள் எடுத்து புதிய உலக சாதனையை ஷமி படைத்துள்ளார்.
- ஒரு உலகக்கோப்பை தொடரில் 7 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்னும் பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.
- ஒரு உலகக்கோப்பை தொடரில் 4 முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்னும் புதிய சாதனையும் ஷமி படைத்துள்ளார்.
- 795 பந்துகளில் 50 விக்கெட்டுகள் எடுத்து குறைந்த பந்துகளில் 50 விக்கெட்டுகள் எடுத்த பவுலர் என்னும் புதிய உலக சாதனையையும் ஷமி படைத்துள்ளார்.
- 48 வருட உலகக்கோப்பை தொடரில் அதிக 5 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் என்னும் புதிய சாதனையும் ஷமி வசம் வந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!
’புதிய மருத்துவக்கல்லூரி தொடங்க தடை நீக்கம்… ஆனாலும் இது தவறு’: அன்புமணி