உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
உலக டேபிள் டென்னிஸ் ‘கன்டென்டர் துனிஷ் 2023’ சாம்பியன்ஷிப் போட்டி துனிசியாவில் நடந்து வந்தது. இதில் நேற்று (ஜூன் 25) நடந்த பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி போட்டியில் இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி – அய்ஹிகா முகர்ஜி ஜோடி ஜப்பானின் மியு கிஹாரா – மிவா ஹரிமோட்டா ஜோடியுடன் மோதியது.
இந்த போட்டியில் 35 நிமிடங்கள் 50 விநாடிகளில் சுதிர்தா – அய்ஹிகா ஜோடி 11-5, 11-6, 5-11, 13-11 (3-1) என்ற செட் கணக்கில் மியு கிஹாரா – மிவா ஹரிமோட்டா ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்த வெற்றியின் மூலம் உலக டேபிள் டென்னிஸ் கன்டென்டர் சாம்பியன்ஷிப்பை வென்ற முதல் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனைகள் என்ற பெருமையை சுதிர்தா, அய்ஹிகா பெற்றுள்ளனர்.
நேற்று இறுதிப் போட்டியில் மோதிய ஜப்பான் ஜோடி பெண்கள் இரட்டையர் பிரிவு தரவரிசையில் 125வது இடத்தில் இந்திய ஜோடி 36வது இடத்திலும் இருக்கின்றனர்.
எனினும் தற்போதைய வெற்றிக்கு பிறகு இந்திய இணையின் தரவரிசையில் முன்னேற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோனிஷா