2024 World Para Athletics Championships: 2024 உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பானில் உள்ள கோபே நகரில் நடைபெற்று வருகிறது.
கோபேவின் சுமா-கு பகுதியில் உள்ள கோபே யூனிவர்ஸியட் நினைவிட மைதானத்தில் கடந்த மே 17 அன்று தொடங்கிய இந்த சாம்பியன்ஷிப் போட்டிகள், மே 25 வரை நடைபெறவுள்ளது.
அதன் ஒரு பகுதியாக நேற்று (மே 21) நடைபெற்ற போட்டிகளில், அபாரமாக விளையாடிய இந்திய வீரர், வீராங்கனைகள், இன்றைய நாளில் மட்டும் 5 பதக்கங்களை குவித்துள்ளனர்.
ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம், டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி என இந்தியாவுக்காக ஒலிம்பிக் பதக்கங்களை வென்று குவித்த தமிழ்நாட்டை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, இந்த 2024 உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடரில் டி63 உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
மாரியப்பன் தங்கவேலு இப்போட்டியில் 1.88 மீ உயரம் தண்டி இந்த பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
மிழ்நாட்டின் தங்கமகன் என்று அன்போடு அழைக்கப்படும் அவருக்கு, “மேலும் உயர்ந்து பல உச்சங்களை எட்ட வேண்டும்”, என முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2023 உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடரில், எஃப்64 ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்ற இந்தியாவை சேர்ந்த சுமித் அன்டில், தற்போது 2024 உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தனது பட்டத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.
69.50 மீ தூரத்திற்கு ஈட்டியை எறிந்து இந்த பதக்கத்தை வென்ற சுமித் அன்டில், முன்னதாக டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியிலும் தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே பிரிவில் மற்றோரு இந்திய வீரரான சந்தீப் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
முன்னதாக, இன்று எஃப்51 கிளப் த்ரோ பிரிவில் இந்தியாவின் ஏக்தா பயான் தங்கம் வென்றிருந்தார். இதே பிரிவில் மற்றோரு இந்திய வீராங்கனையான காஷிஷ் லக்ரா வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
இதன்மூலம், இன்று ஒரு நாளில் மட்டும் இந்தியா 3 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என 5 பதக்கங்களை வென்றது. இதை தொடர்ந்து, இந்த தொடரில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 4 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 10 பதக்கங்களாக உயர்ந்துள்ளது.
இதன்மூலம், இந்தியா பதக்கப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 15 தங்கங்கள் உட்பட 41 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது. 14 தங்கங்கள் உட்பட 25 பதக்கங்களுடன் பிரேசில் 2வது இடத்தில் உள்ளது.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நுழைவுத் தேர்வில் மோசடி: எய்ம்ஸ் மருத்துவர்கள் கைது!
டாப் 10 செய்திகள் : காற்றழுத்த தாழ்வு பகுதி முதல் மோடி பிரச்சாரம் வரை!
ஹெல்த் டிப்ஸ்: நாள்தோறும் 10,000 நடைகள் என்பது சாத்தியமா?
பியூட்டி டிப்ஸ்: மாறிவரும் பருவநிலைக்கேற்ப உங்களை அழகாக்கிக் கொள்வது எப்படி?