2011 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு பிறகு, வான்கடே மைதானத்தில் மீண்டும் ஒரு முக்கியமான ஒரு உலகக்கோப்பை போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இதுவரை விளையாடி 6 போட்டிகளிளுமே வெற்றி பெற்றுள்ள இந்தியா, இந்த போட்டியிலும் வெற்றி பெற்றால், அரையிறுதிக்கு தகுதி பெற்று விடும் என்ற நிலையில் களம் கண்டது.
இப்போட்டியில், முதலில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் குஷல் மெண்டிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்தியா எந்த மாற்றமும் இன்றி அதே அணியுடன் களமிறங்கியது.
முதலில் பேட்டிங் செய்ய வந்த ரோகித் சர்மா, 2வது பதிலேயே 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், மற்றொரு துவக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் சிறப்பாக விளையாடி 92 ரன்கள் சேர்த்தார். அவருடன் ஜோடி சேர்ந்த விராட் கோலியும் 88 ரன்கள் குவித்து அசத்தினார்.
இவர்கள் விக்கெட்டிற்கு பிறகு களமிறங்கிய ஷ்ரேயஸ் அய்யர், 6 சிக்ஸ்களுடன் வெறும் 56 பந்துகளில் 82 ரன்கள் விளாசினார். இவருடன் 24 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்து, ரவீந்திர ஜடேஜா பினிஷிங் டச் கொடுக்க, இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 357 ரன்கள் சேர்த்திருந்தது. இலங்கை சார்பில் தில்சன் மதுசங்கா 5 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார்.
358 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு, சிராஜ் – பும்ரா மிரட்டலான வரவேற்பு கொடுத்தனர். முதல் 4 ஓவர்களிலேயே, இலங்கை அணி 4 விக்கெட்களை பறிகொடுத்தது.
இவர்களின் ஸ்பெல்லுக்கு பின் பந்துவீச வந்த முகமது ஷமி, தான் வீசிய முதல் 5 ஓவர்களில் மேலும் 5 விக்கெட்களை வீழ்த்தி மிரளவைத்தார்.
இதை தொடர்ந்து, பேட்டிங்கில் பினிஷிங் டச் கொடுத்த ரவீந்திர ஜடேஜா, பவுலிங்கிலும் பினிஷிங் டச் கொடுத்து இலங்கை அணியின் 10வது விக்கெட்டை வீழ்த்தினார்.
இதன்மூலம், 302 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்துள்ள இந்திய அணி, 14 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. மேலும், இந்த வெற்றியின் மூலம், முதல் அணியாக இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
முரளி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கட்சியிலிருந்து நீக்க அதிகாரம் இல்லை: சசிகலா தரப்பு வாதம்!
இசை நிறுவனத்தை தொடங்கும் வைஜெயந்தி மூவிஸ்!