மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2024 மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரை, அக்டோபர் 3 முதல் 20 வரை வங்கதேசத்தின் டாக்கா மற்றும் சில்ஹெட் ஆகிய நகரங்களில் ஐசிசி நடத்த திட்டமிட்டிருந்தது.
ஆனால், இதற்கிடையில் இடஒதுக்கீடு மசோதா காரணமாக வங்கதேசத்தில் வெடித்த போராட்டம் மிகப்பெரிய கலவரமாக மாற, அந்நாடு ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. இதை தொடர்ந்து, வங்கதேசத்தில் திட்டமிட்டபடி மகளிர் டி20 உலகக்கோப்பையை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.
இதற்கிடையில், இந்த உலகக்கோப்பை தொடரை இந்தியாவில் நடத்த ஐசிசி வேண்டுகோள் விடுத்த நிலையில், பருவக்காலத்தை காரணம் காட்டி இந்த தொடரை நடத்த பிசிசிஐ தலைவர் ஜெய்ஷா மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த 2024 மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் வங்கதேசத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே திட்டமிடப்பட்ட அக்டோபர் 3 – 20 கால அட்டவணையில், இந்த தொடர் துபாய் மற்றும் சார்ஜா ஆகிய நகரங்களில் நடைபெறும் என ஐசிசி தெரிவித்துள்ளது. மேலும், வங்கதேச கிரிக்கெட் வாரியமே இந்த தொடரை நடத்தும் என்றும் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
10 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கவுள்ள நிலையில், இந்த அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று ஆட்டங்கள் நடத்தப்படும். இதை தொடர்ந்து, 2 பிரிவுகளிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதியில் விளையாடும். அதில் வெற்றி பெரும் அணிகள் அக்டோபர் 20 அன்று நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் விளையாடும்.
முன்னதாக அறிவிக்கப்பட்ட அட்டவணையில், இந்தியாவுடன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– மகிழ்
”தமிழ் திரையுலகிலும் பாலியல் துன்புறுத்தல் இருக்கு” : சனம் ஷெட்டி பகீர் பேட்டி!
7 மணி நேரம் நடப்பீர்களா? ஒரு நாளுக்கு ரூ.28,000 ஊதியத்துடன் டெஸ்லா நிறுவனத்தில் வேலை!