இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் பெண் வீராங்கனைகளுக்கு ஆண் வீரர்களுக்கு சமமாக ஊதியம் வழங்கப்படும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இன்று (அக்டோபர் 27) தெரிவித்துள்ளார்.
ஆடவர் கிரிக்கெட் போட்டிகளுக்கு மட்டும் தான் பிசிசிஐ முக்கியத்துவம் வழங்குகிறது என்ற குற்றச்சாட்டு சமீக காலமாக அதிகரித்து வந்தது. குறிப்பாக கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் ஆடவர் மற்றும் மகளிர் ஆகிய இருதரப்பிற்கும் வேறுபட்டே இருந்தது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் வீரர்களுக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்ற ஒரு முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பின்படி, டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு 15 லட்சம், ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்கு 6 லட்சம், டி20 போட்டியில் விளையாடுவதற்கு 3 லட்சம் இந்திய வீராங்கனைகளுக்கும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்ட பதிவில், ”பாகுபாட்டைக் கையாள்வதற்கான முதல் படியை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கிரிக்கெட்டில் பாலின சமத்துவத்தின் புதிய சகாப்தத்திற்கு நாம் செல்லும்போது ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் வீரர்களுக்கான போட்டிக் கட்டணம் ஒரே மாதிரியாக இருக்கும்” என்றும் கூறியுள்ளார்.
இந்த அறிவிப்பிற்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்திய கிரிக்கெட் மூத்த வீராங்கனை மித்தாலி ராஜ், “இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட்டில் இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு.
அடுத்த ஆண்டு மகளிர் ஐபிஎல் போட்டிகளை ஊதிய சமபங்கு கொள்கையுடன் பெண்கள் கிரிக்கெட்டுக்கான புதிய சகாப்தத்தை நாங்கள் தொடங்குகிறோம். இந்த முடிவை எடுத்ததற்காக நான் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன்” என்று ஜெய் ஷாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
போட்டிகளுக்கான ஊதியத்தை உயர்த்தியிருந்தாலும் வீராங்கனைகளுக்கான ஆண்டு ஊதியத்தை பிசிசிஐ இன்னும் உயர்த்தவில்லை. விராட் கோலி போன்ற முதல் தர (ஏ+) வீரர்களுக்கு ஆண்டு ஊதியமாக 7 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.
ஏ பிரிவு வீரர்களுக்கு 5 கோடியும் பி மற்றும் சி பிரிவு வீரர்களுக்கு 3 கோடியும் ஆண்டு ஊதியமாக பிசிசிஐ வழங்கி வருகிறது.
ஆனால், மகளிர் கிரிக்கெட்டில், ஏ பிரிவு வீராங்கனைகளுக்கு 50 லட்சமும் பி பிரிவு வீராங்கனைகளுக்கு 30 லட்சமும் சி பிரிவு வீராங்கனைகளுக்கு 10 லட்சமும் ஆண்டு ஊதியமாக பிசிசிஐ வழங்கி வருகிறது.
பிசிசிஐ-க்கு முன்பாக ஏற்கனவே நியூசிலாந்து, மகளிர் மற்றும் ஆடவருக்கான ஊதியத்தை சமமாக வழங்க உள்ளதாகக் கடந்த ஆண்டு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
கோவை கார் வெடிப்பு: என்.ஐ.ஏ விசாரிக்க மத்திய அரசு உத்தரவு!
T20 WorldCup 2022: சூர்ய குமார் யாதவுக்காக விட்டுகொடுத்த விராட் கோலி