வங்காளதேசத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை பெண்கள் டி 20 கிரிக்கெட் தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக இன்று (அக்டோபர் 4 ) நடைபெற்ற போட்டியில் 104 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்திய அணியின் கேப்டன் மந்தனா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, களமிறங்கிய இந்திய அணி, 3 விக்கெட் இழப்பிற்கு 20 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது. இதன்பின் களமிறங்கிய தீப்தி சர்மாவும், ஜெமிமாவும் அதிரடியாக விளையாடினார்கள்.
49 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து தீப்தி ஆட்டமிழந்தார். ஜெமிமா 45 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தீப்தி- ஜெமிமா கூட்டணி மொத்தம் 81 பந்துகளில் 128 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது.
பின்னர் களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரக அணியினர் இந்திய அணியின் பந்துவீச்சில் ரன்கள் எடுக்க முடியாமல் தடுமாறினர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் மட்டுமே எடுத்தது.
104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, தரவரிசை பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
குட்கா விற்பனை: இந்து முன்னணி தலைவர் கைது!
இயற்பியலுக்கான நோபல் பரிசு: 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு!