செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலம் வென்று இந்திய அணிக்கு பெருமை சேர்த்த கோவா செஸ் கிராண்ட்மாஸ்டர் பக்தி குல்கர்னிக்கு அரசு வேலை வழங்கப்பட இருக்கிறது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 9ம் தேதி வரை நடைபெற்ற 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி 6 பிரிவுகளில் பங்கேற்றது.
இதில் ஆண்கள் ஓபன் அணி 3 பிரிவுகளிலும், மகளிர் அணி 3 பிரிவுகளிலும் பங்கேற்றது. இதில் இந்திய ஓபன் பி அணியும், மகளிர் பிரிவில் ஏ அணியும் வெண்கலத்தைப் பெற்றுத்தந்து நாட்டுக்குப் பெருமைசேர்த்தனர்.
இந்த மகளிர் பிரிவின் ஏ அணியில் இடம்பெற்றிருந்தவர் கோவாவைச் சேர்ந்த மகளிர் செஸ் கிராண்ட்மாஸ்டர் பக்தி குல்கர்னி.
அவருடன் ஹரிகா, கொனேரு ஹம்பி, ஆா்.வைஷாலி, தானியா சச்தேவ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்த அணியில் இடம்பெற்ற வீராங்கனைகள் தொடக்கம் முதலே விறுவிறுப்பாக விளையாண்டனர்.
இதையடுத்து, இறுதியில் இந்த அணி வெண்கலம் வென்றது. இந்த அணியில் இடம்பெற்ற கோவாவின் பக்தி குல்கர்னி, அம்மாநிலத்தின் முதல் மகளிர் கிராண்ட்மாஸ்டர் என்கிற பெருமையைக்குரியவர் ஆவார்.
இந்த நிலையில் சென்னை செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்றுதந்த செஸ் வீராங்கனை பக்தி குல்கர்னிக்கு அரசு வேலை வழங்கப்படும் என கோவா அரசு அறிவித்துள்ளது.
கோவா விளையாட்டு ஆணையத்தில் செஸ் நிபுணர் பணி அவருக்குக் கிடைக்கவுள்ளது. கோவா செஸ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் இதற்கான அறிவிப்பை அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்தார்.
அத்துடன், கோவா அரசு சார்பில் பக்தி குல்கர்னிக்கு ரூ. 10 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.
ஜெ.பிரகாஷ்
செஸ் ஒலிம்பியாட்: மகளிர் பிரிவில் இந்தியாவுக்கு வெண்கலம்!