ICC WorldCup 2023: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இன்று(அக்டோபர் 11) நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் அதிரடி சதம் கண்ட ரோகித் சர்மா பல்வேறு உலக சாதனைகளை முறியடித்துள்ளார்.
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 9வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்டது இந்தியா.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் ஷாகிதி 80 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய பும்ரா, ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார்.
ரோகித் சர்மா ருத்ரதாண்டவம்!
தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்கவீரரான கேப்டன் ரோகித் சர்மா ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக பேட்டை சுழற்றி ருத்ரதாண்டவம் ஆட, இசான் கிஷான் பொறுமையை கடைபிடித்தார்.
உண்மையில் பழைய பன்னீர்செல்வமாக மாறி மைதானத்தின் நாலாப்புறமும் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை சிதறடித்த ரோகித் சர்மா, 63 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.
https://twitter.com/Dhruv_tr108/status/1712111366574870851
இதன்மூலம் உலகக்கோப்பை போட்டியில் பல்வேறு ஜாம்பவான்களின் உலக சாதனைகளை முறியடித்து புதிய சாதனையை படைத்தார்.
ரோகித் சர்மா சாதனை விவரம்!
இந்த போட்டியில் மொத்தம் 5 சிக்ஸர்களை விளாசிய அவர், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசிய கெயிலின் (553) சாதனையை முறியடித்து 554* சிக்ஸருடன் புதிய உலக சாதனை படைத்திருக்கிறார்.
ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸில் ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார்.
மேலும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் அதிக சதம் அடித்தவர் என்ற சாதனையை தக்கவைத்திருந்த சச்சினின் (6 முறை) உலக சாதனையையும் தற்போது ரோகித் சர்மா(7 முறை) முறியடித்துள்ளார்.
குறிப்பாக 63 பந்துகளில் அதிரடியாக சதமடித்த ரோகித் சர்மா உலக கோப்பையில் அதிவேகமாக சதமடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்று பெருமையை பெற்றுள்ளார்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இந்த தொடக்க ஜோடியை, இசான் கிஷன் விக்கெட்டை கைப்பற்றி பிரித்தார் ரஷீத்கான்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தொடக்க பேட்ஸ்மேன்களான களமிறங்கிய இந்த ஜோடி, டக் அவுட் ஆகி மோசமான சாதனை செய்து விமர்சனத்திற்கு உள்ளானது. அதற்கு பதிலடியாக இந்த ஆட்டத்தில் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 156 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா வெற்றி!
இஷானை தொடர்ந்து 8 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடித்து சிறப்பாக ஆடிவந்த ரோகித் சர்மாவும் (131) ரஷீத் கான் பந்துவீச்சில் கிளீன்போல்டாகி வெளியேறினார்.
எனினும் அடுத்து களமிறங்கிய விராட் கோலி (55) மற்றும் ஸ்ரேயாஷ் ஐயர்(25) இருவரும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிபாதைக்கு அழைத்து சென்றனர்.
35 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் குவித்த இந்திய அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
இதன்மூலம் உலகக்கோப்பை புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் இருந்த இந்திய அணி 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
போட்டியில் அதிவேக சதம் அடித்து அசத்திய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருது பெற்றுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ICC worldcup: வாரி வழங்கிய சிராஜ்… அதிகபட்ச ஸ்கோர் குவித்த ஆப்கானிஸ்தான்!
வரி பகிர்வு : மத்திய அரசை விமர்சித்த தங்கம் தென்னரசு – அண்ணாமலை பதில்!