நியூசிலாந்து டி20 கிரிக்கெட் மற்றும் ஒருநாள் அணிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து கேன் வில்லியம்சன் விலகியுள்ளார்.
2024 டி20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவில் நடைபெற்ற லீக் போட்டியுடன் அனுபவம் வாய்ந்த அணியாக கருதப்பட்ட நியூசிலாந்து முதல் அணியாக வெளியேறியது.
2011ஆம் ஆண்டு முதல் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தலைமையில் அந்த அணி 10 ஐசிசி தொடர்களில் விளையாடி உள்ளது. இதில், 7 முறை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
ஆனால், நியூசிலாந்து அணியின் ஜாம்பவானான கேன் வில்லியம்சன், காயத்திற்கு பின் டி20 கிரிக்கெட்டின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் பெரும் சிரமப்பட்டு வருகிறார். அதேபோல், நடப்பு டி20 தொடரில் லீக் போட்டியிலேயே நியூசிலாந்து அணி வெளியேறி உள்ளது.
இந்நிலையில், 2024-25ஆம் ஆண்டுக்கான நியூசிலாந்து அணியின் மத்திய ஒப்பந்தத்தை கேன் வில்லியம்சன் நிராகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் நியூசிலாந்து அணியின் டி20 மற்றும் ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்தும் கேன் வில்லியம்சன் விலகி உள்ளதாக கூறப்படுகிறது.
நியூசிலாந்தை பொறுத்தவரை நியூசிலாந்து கிரிக்கெட்டின் மத்திய ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ள வீரர்களே அணியில் சேர்க்கப்படுவார்கள்.
இதுகுறித்து கேன் வில்லியம்சன், ”நியூசிலாந்து கிரிக்கெட்டை எதிர்காலத்தை மனதில் வைத்தே இந்த முடிவை எடுத்துள்ளேன். நியூசிலாந்து அணிக்காக தொடர்ந்து பங்களிக்கவும் தயாராகவுள்ளேன்.
நியூசிலாந்து சம்மரின் போது வெளிநாடுகளில் நடக்கும் லீக் போட்டிகளில் விளையாட முடிவு செய்திருக்கிறேன். அதனால் என்னால் நியூசிலாந்து அணியின் மத்திய ஒப்பந்தத்தை ஏற்க முடியாது.
நியூசிலாந்து அணிக்காக விளையாடுவது எப்போதும் விலை மதிப்பில்லாதது. நியூசிலாந்து கிரிக்கெட்டுக்கு திருப்பி கொடுக்க முடியாத அளவிற்கு கடமைப்பட்டுள்ளேன்.
கிரிக்கெட்டை கடந்து வெளியில் எனது வாழ்க்கை மாறிவிட்டது. குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதும், அவர்களுடன் உடனிருப்பதும் முக்கியமாக உள்ளது என பேசினார்.
அவருக்காக தளர்வு கொண்டு வருவோம்!
இதுகுறித்து நியூசிலாந்து கிரிக்கெட்டின் சிஇஓ ஸ்காட் வீனிக் கூறியதாவது, ”கேன் வில்லியம்சனுக்காக எங்களின் விதிகளில் சில தளர்வுகளை கொண்டு வருவோம். அவரை நீண்ட நாட்கள் தேசிய அணிக்காக விளையாட வைப்பதற்கு இது உதவியாக இருக்கும்.
மத்திய ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ள வீரர்களை மட்டுமே தேர்வு செய்யும் நடைமுறை இருந்தாலும், எங்களின் கிரேட்டஸ்ட் பேட்ஸ்மேனுக்காக தளர்வுகளை கொண்டு வருகிறோம்” எனக் கூறினார்.
இதனால் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கேன் வில்லியம்சன் நிச்சயம் இடம்பெறுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே நியூசிலாந்து மத்திய ஒப்பந்தத்தை ஏற்காமல் நட்சத்திர வீரர் ட்ரென்ட் போல்ட் லீக் போட்டிகளில் விளையாடினார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சென்னையில் வெளுத்து வாங்கிய மழை: விமான சேவை பாதிப்பு
நூர்மி தடகள போட்டி : தங்கம் வென்று நீரஜ் சோப்ரா அசத்தல்!