ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் கடந்தாண்டு அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை நடைபெற்றது.
இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்ற நிலையில், இறுதிப்போட்டி வரை முன்னேறிய இந்திய அணி, இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது.
இந்த தொடர் இந்தியாவின் அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, தர்மசாலா, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை மற்றும் புனே என 10 நகரங்களில் நடைபெற்றது.
இந்நிலையில், இந்த தொடரின் மூலம் இந்தியாவுக்கு ரூ.11,637 கோடி பொருளாதார ஆதாயம் கிடைத்துள்ளதாக சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், இதுவரை நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பைகளில் இதுவே மிகப்பெரிய உலகக்கோப்பை என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது.
2011 ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்குப்பின், இந்தியாவில் நடைபெற்ற 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரை 12.5 லட்சம் மக்கள் மைதானத்திற்கு சென்று கண்டுகளித்துள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. அதில் 75% பார்வையாளர்கள் முதல்முறையாக ஒருநாள் உலகக்கோப்பை தொடரை மைதானத்தில் பார்த்தவர்கள் என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது.
இவர்கள் மூலம் மட்டும் போட்டி நடந்த நகரங்களில் தங்குமிடம், உணவு, போக்குவரத்து என ரூ.7,243 கோடி பொருளாதார ஆதாயம் ஏற்பட்டுள்ளதாக ஐசிசி கூறியுள்ளது.
மேலும், இந்த உலகக்கோப்பை தொடரை பார்க்க வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்களில், 19% பேர் முதன்முறையாக இந்தியாவிற்கு பயணித்தவர்கள் என்றும் ஐசிசி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த வெளிநாட்டு பயணிகள் போட்டிகள் மட்டுமின்றி, மற்ற சுற்றுலா தளங்களையும் பார்வையிட்டதன் மூலம், இந்தியாவில் ரூ.2,364 கோடி பொருளாதார ஆதாயம் உருவாகியுள்ளதாகவும் தனது அறிக்கையில் ஐசிசி குறிப்பிட்டுள்ளது.
மேலும், அவர்களில் 68% பேர் இந்தியாவிற்கு செல்ல தங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு பரிந்துரைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். 59% பேர் மீண்டும் இந்தியாவை பார்வையிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இவை மட்டுமின்றி, இந்த தொடரின் மூலம் சுமார் 48,000 நேரடி மற்றும் மறைமுக, நிரந்தர மற்றும் தற்காலிக வேலைவாய்ப்புகள் இந்தியாவில் உருவாகியுள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– மகிழ்
ஆதாரை 14ஆம் தேதிக்குள் புதுப்பிக்காவிட்டால் என்னாகும்?: அதிகாரிகள் விளக்கம்!
”ஒவ்வொரு நடிகர்களும் ஒருவிதம்” : பட்டியல் போடும் நடிகை அம்பிகா