இந்தியாவின் தலைமை பயிற்சியாளராக CSK-வின் ஸ்டீபன் பிளெமிங்?

விளையாட்டு

Stephen Fleming: தற்போது இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட்டின் பதவி காலம் ஜூன் 30-உடன் நிறைவடையவுள்ள நிலையில், புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் விண்ணப்பங்களை பெற்று வருகிறது.

2024 ஜூலை 1 முதல் 2027 டிசம்பர் 31 வரை, இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்ற இந்த விண்ணப்பங்கள் பெறப்பட்டு வரும் நிலையில், இந்த பொறுப்பை ஏற்க விரும்புவோர் மே 27 மாலை 6 மணி வரை தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் குறைந்த பட்சம் 30 டெஸ்ட் அல்லது 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும், அல்லது டெஸ்ட் விளையாடும் நாடுகளின் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும், அல்லது ஐபிஎல் அல்லது அதற்கு நிகரான தொடர்களில் எதாவது ஒரு அணிக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் தலைமை பயிற்சியாளராக பணியாற்றியிருக்க வேண்டும் என நிபந்தனைகள் விதித்துள்ளது. மேலும், விண்ணப்பிப்போரின் வயது 60-க்கும் குறைவாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிவிப்பை பிசிசிஐ நேற்று (மே 13) வெளியிட்ட நிலையில், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக பொறுப்பு வகித்து வரும் ஸ்டீபன் பிளெமிங்கை, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முற்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2008-ஆம் ஆண்டு இந்தியாவில் ஐபிஎல் தொடர் துவங்கப்பட்டபோது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஸ்டீபன் பிளெமிங் 350,000 அமெரிக்க டாலர்களுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

அந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப்போட்டி வரை முன்னேறி கோப்பையை வெல்ல தவறிய நிலையில், அந்த தொடரில் சென்னை அணிக்காக 10 போட்டிகளில் விளையாடிய பிளெமிங், 196 ரன்களை சேர்த்திருந்தார்.

பின், ஸ்டீபன் பிளெமிங் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், 2009-ஆம் ஐபிஎல் தொடரில் அவரை தலைமை பயிற்சியாளராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நியமித்தது.

தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட 2வது ஆண்டிலேயே (2010), சென்னை அணிக்கு ஒரே ஆண்டில் ஐபிஎல் கோப்பை, சாம்பியன்ஸ் லீக் கோப்பை என 2 கோப்பைகளை அடுத்தடுத்து வென்று கொடுத்தார். அதன்பின், சென்னை அணியின் ஆஸ்தான தலைமை பயிற்சியாளராக ஸ்டீபன் பிளெமிங் மாறினார்.

தொடர்ந்து, சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றிவந்த ஸ்டீபன் பிளெமிங், 2016, 2017-ஆம் ஆண்டுகளில் அந்த அணிக்கு தடை விதிக்கப்பட்டபோது, தோனி இடம் பெற்றிருந்த புனே சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

பின், 2018-ஆம் ஆண்டு சென்னை அணி மீண்டும் ஐபிஎல் தொடருக்கு திரும்பியபோது, மீண்டும் அந்த அணியில் தலைமை பயிற்சியாளராக இணைந்தார். பின் தற்போது வரை அந்த அணியின் தலைமை பயிற்சியாளராகவே தொடர்கிறார்.

அதுமட்டுமின்றி, தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் SA20 தொடரில் ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராகவும், அமெரிக்காவில் நடைபெறும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் டெக்சஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராகவும், ஸ்டீபன் பிளெமிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

இப்படி இந்திய மண்ணிலும், வெளிநாட்டு ஆடுகளங்களிலும் ஸ்டீபன் பிளெமிங் மிகுந்த அனுபவம் பெற்றுள்ளதால், அவரை தலைமை பயிற்சியாளராக பிசிசிஐ மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட், குடும்பத்துடன் நேரத்தை செலவிட விரும்புவதால், அவர் மீண்டும் இப்பொறுப்புக்கு விண்ணப்பிக்க ஆர்வம் காட்ட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த இந்திய தலைமை பயிற்சியாளருக்கான போட்டியில், விவிஎஸ் லட்சுமண், ஜஸ்டின் லாங்கர் ஆகியோரும் உள்ளதாக கூறப்படுகிறது.

மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 செய்திகள் : மோடி வாகன பேரணி முதல் செந்தில் பாலாஜி வழக்கு வரை!

ஜிவி பிரகாஷ் சைந்தவி பிரிவு…. அதிகரிக்கும் கார்ப்பரேட் காதல் – கே.ராஜன் காட்டம்!

வேலைவாய்ப்பு: தஞ்சாவூர் விமானப்படைத்தளத்தில் பணி!

கிச்சன் கீர்த்தனா : சீஸ் பால்ஸ்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *