ஆசிய கோப்பை யாருக்கு? இறுதிப் போட்டியில் இலங்கை – பாகிஸ்தான்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (செப்டம்பர் 11) நடைபெறும் இறுதிபோட்டியில் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

கடந்த மாதம் 27ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கிய ஆசிய கோப்பை போட்டி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெறும் இறுதிபோட்டியில் இலங்கை அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

அணிகளின் விபரம்!

சூப்பர்4 சுற்றில் இலங்கை அணி தான் சந்தித்த 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. பாகிஸ்தான் அணி 2 வெற்றி, ஒரு தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பெற்றது. முதல் இரண்டு இடத்தை பிடித்த இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளன. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி 2 புள்ளியுடன் 3-வது இடமும், 3 ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்த ஆப்கானிஸ்தான் அணி கடைசி இடத்துக்கும் தள்ளப்பட்டு தொடரில் இருந்து வெளியேறின.

தடுமாறும் பாபர் அசாம்!

பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கில் தடுமாறி வரும் நிலையில், விக்கெட் கீப்பரும், தொடக்க ஆட்டக்காரருமான் ரிஸ்வான், பஹர் ஜமான், இப்திகர் அகமது ஆகியோர் சிறப்பான ஃபார்மில் உள்ளனர். அதேபோல் பந்து வீச்சிலும் ஷதப் கான், நசீம் ஷா, ஹாரிஸ் ரவுப், முகமது நவாஷ் ஆகியோர் கலக்கி வருகின்றனர்.

தாண்டவமாடும் இலங்கை!

லீக் சுற்றில் தட்டு தடுமாறி, சூப்பர் 4 சுற்றில் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி கண்ட இலங்கை புத்தெழுச்சியுடன் இறுதிப்போட்டியை சந்திக்கிறது. ஆசியக்கோப்பையில் பேட்டிங்கில் அதிரடி காட்டி வரும் இலங்கை அணிக்கு பதும் நிசாங்கா, குசல் மென்டிஸ், ராஜபக்சே, கேப்டன் தசும் சனகா ஆகியோர் வலுசேர்க்கின்றனர். பந்து வீச்சில் ஹசரங்கா, தில்ஷன் மதுஷனகா, தீக்‌ஷனா, சமிகா கருணாரத்னேவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை அணி, இறுதிப்போட்டியில் மீண்டும் பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய கோப்பையை கைப்பற்றுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேநேரத்தில் சூப்பர் 4 சுற்றில் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்கும் விதமாக பாகிஸ்தான் அணியும் தரமான ஆட்டத்தை இன்று வெளிபடுத்தும்.

ஆசிய கோப்பை : இலங்கை, பாகிஸ்தான்

இரு அணிகளும் இதுவரை 22 முறை சர்வதேச 20 ஓவர் போட்டியில் மோதி இருக்கின்றன. இதில் பாகிஸ்தான் 13 ஆட்டங்களிலும், இலங்கை 9 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன. ஆசிய கோப்பையை இலங்கை அணி 1986, 1997, 2004, 2008 மற்றும் 2014 என 5 முறையும், பாகிஸ்தான் அணி 2000 மற்றும் 2012 என 2 முறையும் வென்றுள்ளன.

துபாய் சர்வதேச மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

கிறிஸ்டோபர் ஜெமா

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts