இந்தியாவில் நடைபெற்றுவரும் 2023 உலகக்கோப்பை தொடரில், இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதேபோல, ஆப்கானிஸ்தான் , நெதர்லாந்து போன்ற புதிய அணிகளுக்கு எழுச்சி தரும் தொடராகவும், இந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடர் அமைந்துள்ளது.
ஆனால், பல முக்கிய அணிகளுக்கு இது ஒரு ஏமாற்றம் நிறைந்த தொடராகவே தொடர்கிறது.
குறிப்பாக, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து இதுவரை விளையாடிய 6 போட்டிகளில், 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
அதேபோல, முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான், முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்றாலும், அடுத்த 4 போட்டிகளில் தோல்வியடைந்து, புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.
இதனால், அரையிறுதிக்கு தகுதி பெற, பாகிஸ்தான் அடுத்த 3 போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து ஆகிய அணிகளின் அடுத்தடுத்த ஆட்டங்களின் முடிவுகளை பொறுத்தே, பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு உறுதி செய்யப்படும்.
இந்நிலையில், 1992 ஒருநாள் உலகக்கோப்பையில் நிகழ்த்திய அதிசயத்தை, இந்த தொடரிலும் பாகிஸ்தான் நிகழ்த்துமா என்ற கேள்வி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
1992 உலக்கோப்பையில் நடந்தது என்ன?
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 1992 உலகக்கோப்பை தொடரில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, இலங்கை, மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாவே என 9 அணிகள் பங்கேற்றன.
இந்த தொடரில் தான் விளையாடிய முதல் 5 போட்டிகளில், மேற்கிந்திய தீவுகள், இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிரான 3 போட்டிகளில் படுதோல்வியடைந்த பாகிஸ்தான், ஜிம்பாவே அணிக்கு எதிராக மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.
மேலும், இங்கிலாந்துக்கு எதிரான போட்டி ரத்தானதால், புள்ளிப்பட்டியலில் வெறும் 3 புள்ளிகளை மட்டுமே பெற்றிருந்த பாகிஸ்தான்,
அரையிறுதிக்கு செல்ல அடுத்து இருக்கும் 3 போட்டிகளும் வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.
இப்படியான சூழலில், தனது 6வது போட்டியில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்ட பாகிஸ்தான் 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பின், இலங்கை மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளையும் வீழ்த்தியது.
இந்த அதிரடி கம்-பேக் மூலம், ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் என 2 ஜாம்பவான் அணிகளை வெளியேற்றி, பாகிஸ்தான் 4வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது.
அரையிறுதியில், நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில், 49வது ஓவரின் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற பாகிஸ்தான், இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, முதல் முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
முரளி
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு!
53 மின்சார ரயில்கள் ரத்து: கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கம்!