சிட்னியில் இன்று (நவம்பர் 09) நடக்கும் முதல் டி20 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியும், பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலகக்கோப்பை இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
அதன்படி சிட்னி மைதானத்தில் இன்று நடக்கும் முதல் அரையிறுதி போட்டியில் பலம் வாய்ந்த கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியை பாகிஸ்தான் அணி எதிர்கொள்கிறது.
சூப்பர் 12 சுற்றில் நியூசிலாந்து
கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிபோட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது நியூசிலாந்து. அதற்கு பதிலடியாக நடப்பு உலக்கோப்பையில் தனது முதல் ஆட்டத்திலேயே ஆஸ்திரேலியாவை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

அதன்பின்னர் இலங்கை, அயர்லாந்து ஆகிய அணிகளையும் நியூசிலாந்து சுலபமாகவே தோற்கடித்தது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டி மழையால் நின்று விட்ட நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து தோற்றிருந்தது.
எனினும் குரூப் 1ல் 3 வெற்றிகளுடன் அதிக ரன்ரேட் வைத்திருந்த நியூசிலாந்து சூப்பர் 12 சுற்றிலிருந்து முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

தட்டு தடுமாறிய பாகிஸ்தான்
இதற்கு நேர்மாறாக பாகிஸ்தான் அணி இந்த உலகக்கோப்பையில் தட்டு தடுமாறி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.
கடந்த உலகக்கோப்பையில் முதல் போட்டியிலேயே இந்திய அணியை தோற்கடித்த பாகிஸ்தான், இந்த உலகக்கோப்பையில் விராட் கோலி – ஹர்திக் பாண்டியாவின் அசைக்க முடியாத கூட்டணியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது.
அதன்பின்னர் 1 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியிடம் பாகிஸ்தான் அதிர்ச்சி தோல்வி கண்டது. இதனால் பாகிஸ்தான் கதை முடிந்தது என்று அனைவரும் நினைத்தனர்.
ஆனால் நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய அணிகளை அடுத்தடுத்து வென்றது. மேலும் அரையிறுதிக்கு நிச்சயம் சென்றுவிடும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தென்னாப்பிரிக்கா அணி, நெதர்லாந்து அணியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறியது.
இதன் பலன் பாகிஸ்தான் அணிக்கு திரும்ப, அந்த அணி 6 புள்ளிகளுடன் அரையிறுதிக்குத் தகுதிப்பெற்றது.

t20 உலகக்கோப்பையில் இரு அணிகள்!
பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் நியூசிலாந்து, இதுவரை 20 ஓவர் உலக கோப்பையை வென்றதில்லை. கடந்த ஆண்டு நடந்த உலகக்கோப்பையில் இறுதி போட்டி வரை சென்றதே அந்த அணியின் அதிகபட்ச சாதனையாகும்.
இந்நிலையில் இன்று நடைபெறும் அரையிறுதியில் பாகிஸ்தான் அணியைத் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு இரண்டாவது முறையாக தகுதி பெறும் முனைப்புடன் இருக்கிறது நியூசிலாந்து அணி.
அதே சமயம் முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் அணி, மூன்றாவது முறையாக இறுதிபோட்டிக்கு தகுதி பெற ஆவலுடன் இருக்கிறது.
இதற்கு முன்பு 2007, 2009ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான் இறுதிபோட்டியை சந்தித்துள்ளது. 2007ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பையில் இந்தியாவிடம் தோற்ற நிலையில், 2009ஆம் ஆண்டு இலங்கையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

யாருக்கு வெற்றிவாய்ப்பு!
டி20 போட்டியை பொறுத்தவரை பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் 28 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 11-ல் நியூசிலாந்தும், 17-ல் பாகிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன.
இந்த உலகக்கோப்பையில் பேட்டிங், பெளலிங், பீல்டிங் ஆகியவற்றில் பாகிஸ்தானை விட நியூசிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டுள்ளது. எனினும் எளிதில் கணிக்க முடியாத அணியாக விளங்கும் பாகிஸ்தான் அணி இன்று தனது அபாரமான ஆட்டத்தை வெளிபடுத்தினால், ஆட்டத்தின் முடிவு நிச்சயம் அந்த அணிக்கு சாதகமாக மாறும்.
எனவே, இரு அணிகளும் இறுதிப்போட்டியை கைப்பற்ற வேண்டும் என்று முனைப்போடு விளையாடும் என்பதில் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதை நிச்சயம் நம்பலாம்.
இந்திய நேரப்படி இன்று மதியம் 1.30 மணிக்கு நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் அரையிறுதிப்போட்டி தொடங்குகிறது.
அதே நேரத்தில் இரு அணிகளில் இன்று யார் வெற்றி பெற்று கோப்பையை கையில் ஏந்த வாய்ப்பளிக்கக்கூடிய இறுதிப்போட்டிக்கு செல்வார்கள் என்பதை கமெண்டில் பதிவு செய்யுங்கள்!
கிறிஸ்டோபர் ஜெமா
22 ஆவது சட்ட ஆணையத்தில் தமிழர் கருணாநிதி
வெளியான ‘விஜயானந்த்’ படத்தின் முதல் பாடல்!