2024 பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு தொடரில், இந்தியா இதுவரை 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ள நிலையில், அதில் 2 பதக்கங்களை தனது சிறப்பான செயல்பாட்டால் மனு பாக்கர் வென்று கொடுத்துள்ளார்.
மகளிர் 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் பிரிவில் தனியாகவும், 10 மீர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி துப்பாக்கி சுடுதல் பிரிவில் சரப்ஜோத் சிங்குடன் இணைந்தும், 2 வெண்கலப் பதக்கங்களை வென்ற மனு பாக்கர், இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு ஒரு ஒலிம்பிக் தொடரில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.
இந்நிலையில், இந்த விளையாட்டு தொடரில் 3வது பதக்கத்தை குறிவைத்து மனு பாக்கர் இன்று (ஆகஸ்ட் 2) களமிறங்குகிறார் என்றால் நீங்கள் நம்புவீர்களா?
இதுவரை 10மீ ஏர் பிஸ்டல் பிரிவுகளில் பங்கேற்ற மனு பாக்கர், இன்று மகளிர் 25 மீ பிஸ்டல் பிரிவின் தகுதிச்சுற்று ஆட்டத்தில் போட்டியிட உள்ளார்.
இந்நிலையில், இந்த பிரிவிலும் மனு பாக்கர் தங்கம் வென்று புதிய வரலாறு படைப்பாரா என கோடிக்கணக்கான இந்திய விளையாட்டு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
22 வயதான மனு பாக்கர், முன்னதாக 2023 உலக சாம்பியன்ஷிப்பில் 25 மீ பிஸ்டல் குழு பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
அதற்கு முந்தைய 2022 உலக சாம்பியன்ஷிப்பில், இதே பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
மேலும், 2023ஆம் ஆண்டு ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய போட்டிகளில், 25 மீ பிஸ்டல் குழு பிரிவில் மனு பாக்கர் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.
இவற்றிற்கும் முன்னதாக, 2021-ஆம் ஆண்டில் நடைபெற்ற ISSF ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில், மனு பாக்கர் 25 மீ பிஸ்டல் குழு பிரிவில் தங்கப் பதக்கத்தையும், 25 மீ பிஸ்டல் (தனி) பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 3வது போட்டி குறித்து பேசியுள்ள மனு பாக்கர், “நான் நிச்சயம் எனது சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்துவேன். ஆனால், ஒருவேளை என்னால் இன்னொரு பதக்கம் வெல்ல முடியாமல் போனால், என்மீது கோபப்படாதீர்கள்”, என ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாரிஸ் ஒலிம்பிக் 2024: பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி, இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு!
ஆடிப்பெருக்கு: காவிரி கரைக்கு வர வேண்டாம்… ஆட்சியர் அறிவுறுத்தல்!
சோதனை அடிப்படையில் ரேஷன் பொருட்களை பாக்கெட்டில் விநியோகிக்கும் திட்டம் தொடக்கம்!
ஹெல்த் டிப்ஸ்: பிசியோதெரபி சிகிச்சைக்கு நேரடியாகச் செல்பவர்களா நீங்கள்?