ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி கோலாலம்பூரில் இன்று (பிப்ரவரி 2) பகல் 12 மணிக்கு நடைபெற உள்ளது.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான முதல் ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை கடந்த 2023ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்டது. இதில் இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஷபாலி வர்மா தலைமையிலான இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
தொடர்ந்து 2வது ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் கடந்த ஜனவரி 18ஆம் தேதி தொடங்கியது.
மொத்தம் 16 அணிகள் பங்கேற்ற நிலையில், லீக் மற்றும் சூப்பர் 6 சுற்று ஆட்டங்களின் முடிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்தையும், தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.
யாருக்கு வாய்ப்பு? Will India win the champion title?
இந்நிலையில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான இறுதிப்போட்டி இந்திய நேரப்படி இன்று பகல் 12 மணிக்கு கோலாலம்பூரில் நடைபெற உள்ளது.
இதுவரை நடந்த 6 போட்டிகளிலும் நிக்கி பிரசாத் தலைமையிலான இந்திய அணி வென்று ஆதிக்கம் செலுத்துகிறது. ஒரு போட்டி மழையால் ரத்தான நிலையில், விளையாடிய 5 போட்டிகளிலும் கேப்டன் கெய்லா ரெனெக் தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி வென்று சாம்பியன் பட்டத்தை குறிவைத்து களமிறங்குகிறது.
இந்திய அணியை பொறுத்தவரை 6 போட்டிகளில் இருந்து 265 ரன்கள் குவித்து, தொடரின் வெற்றி வீராங்கனையாக த்ரிஷா கோங்காடி உள்ளார். பந்துவீச்சில் வைஷ்ணவி சர்மா 15 விக்கெட்டுகளுடன் இந்த போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

பந்துவீச்சை பெரிதும் நம்பியுள்ள தென்னாப்பிரிக்கா அணியை கேப்டன் கெய்லா ரெனெக் 5 போட்டிகளில் இருந்து 10 விக்கெட்டுகளுடன் முன்னணியில் இருந்து வழிநடத்தியுள்ளார். மோனாலிசா லெகோடி மற்றும் ந்தாபிசெங் நினி தலா 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
இந்த நிலையில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இரு அணிகளும் வெல்ல வாய்ப்புள்ளதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதை நம்பலாம். Will India win the champion title?