இந்தியா அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தற்போது இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 இருபது ஓவர் (டி20) போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில், டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது.
இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் முதல் டி20 போட்டியில் இந்தியாவை 4 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி கயானாவில் நேற்று (ஆகஸ்ட் 6) நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்கார்களாக இஷான் கிசன் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர்.
இஷான் கிசன் 23 பந்துகளில் 2 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க சுப்மன் கில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து நடையைக் கட்டினார்.
அதன்பின் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 1 ரன்னில் ரன் அவுட் முறையில் தனது விக்கெட்டை பறிகொடுக்க அதிரடியாக ஆடிய இளம் வீரர் திலக் வர்மா 42 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்ஸர் என மொத்தம் 51 ரன்களை குவித்தார்.
அதன்படி, சர்வதேச கிரிக்கெட்டில் இது அவருடைய முதல் அரை சதம் ஆகும்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 24 ரன்களும் , சஞ்சு சாம்சன் 7 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி மொத்தம் 152 ரன்களை மட்டுமே எடுத்தது.
153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது வெஸ்ட் இண்டீஸ் அணி.
அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிராண்டன் கிங் ரன் எதுவும் எடுக்காமலும் கெய்லி மேயர்ஸ் 15 ரன்களிலும் ஆட்டமிழக்க அடுத்து வந்த ஜான்சன் ஜார்லஸ் 2 ரன்களில் நடையைக் கட்டினார்.
பின்னர், களமிறங்கிய நிகோலஸ் பூரன் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அதன்படி அவர் 40 பந்துகளில் 6 பவுண்டரிகள் 4 சிக்ஸர்கள் என மொத்தம் 67 ரன்கள் குவித்தார்.
இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் 18.5 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்தது.
இதன் மூலம் இந்தியாவை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்றது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
கிச்சன் கீர்த்தனா: கேழ்வரகு கார அடை
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!