ஆடாமலேயே ‘அவுட்’ ஆன மேத்யூஸ்… வைரலாகும் ‘கண்ணீர் புகைப்படம்!

விளையாட்டு

பேட்டிங் செய்யாமலேயே இலங்கை வீரர் மேத்யூஸ் அவுட் ஆன சம்பவம் கிரிக்கெட் வட்டாரங்களில் மிகப்பெரும் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.

உலகக்கோப்பை தொடருக்கான லீக் சுற்று போட்டிகள் தற்போது இந்தியாவில் உள்ள பல்வேறு கிரிக்கெட் மைதானங்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வங்கதேசம்-இலங்கை இடையிலான லீக் சுற்று போட்டி தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதையடுத்து இலங்கை அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.

49.3 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 279 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் சரித் அசலங்கா சதமடித்து (108) இலங்கை அணி 279 என்ற ஸ்கோரை எட்டுவதற்கு உதவி செய்தார். தற்போது வங்கதேச அணி இலங்கைக்கு எதிரான இந்த ஸ்கோரை சேஸிங் செய்து வருகிறது. அந்த அணி 11 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 61 ரன்கள் எடுத்துள்ளது. இதேபோல ஆடினால் வங்கதேசம் அணி வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

இதற்கிடையில் இலங்கை அணி பேட்டிங் செய்தபோது நடந்த சம்பவம் ஒன்று சமூக வலைதளங்கள் மட்டுமின்றி, கிரிக்கெட் வட்டாரங்களிலும் பெருத்த அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை அணி 25-வது ஓவரில் விளையாடிய போது ஷாகிப் அல் ஹசன் வீசிய அந்த ஓவரின் 2-வது பந்தில் சமரவிக்ரமாவின் விக்கெட்டை அவர் வீழ்த்தி இருந்தார். அடுத்ததாக இலங்கை அணியின் பேட்ஸ்மேன் ஏஞ்செலோ மேத்யூஸ் இறங்க வேண்டும்.

அதேபோல மேத்யூஸ் களமிறங்கி விட்டார். ஆனால் அவரின் ஹெல்மெட் சரியாக இல்லாததால் வேறு ஹெல்மெட்டை எடுத்து வருமாறு அவர் பெவிலியனை நோக்கி சைகை செய்ய அங்கிருந்த வீரர்களும் ஹெல்மெட் எடுத்துக்கொண்டு மைதானத்துக்குள் வந்தனர். இதற்கு நடுவில் ஆலோசனை நடத்திய வங்கதேச வீரர்கள் மேத்யூஸ் விளையாட 2 நிமிடங்களுக்கு மேல் ஆனதாக நடுவரிடம் அப்பீல் செய்தனர். இதை கலந்தாலோசித்த நடுவர்கள் ‘டைம் அவுட்’ முறையில் அவருக்கு அவுட் அளித்தனர்.

மேத்யூஸ் இதை எதிர்த்து நடுவரிடம் அப்பீல் செய்தார் என்றாலும் நடுவர்கள் தங்களது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. இதையடுத்து மேத்யூஸ் ஆதங்கத்துடன் பெவிலியன் திரும்பினார். ஐசிசி விதிகளின் படி ஒரு வீரர் 2 நிமிடங்களுக்கு மேல் பேட்டிங் ஆட எடுத்து கொண்டால் அவருக்கு அவுட் கொடுக்க வேண்டும் என விதிமுறை உள்ளது. அதன்படி மேத்யூஸ் 3 நிமிடங்களுக்கும் மேல் விளையாட எடுத்து கொண்டதால் அவருக்கு நடுவர்கள் அவுட் வழங்கினர்.

இதையடுத்து சோகமாக பெவிலியன் திரும்பிய அவர் கண்ணீருடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆடவர் கிரிக்கெட்டை பொறுத்தவரையில் இந்த ‘டைம் அவுட்’ விதியின்படி அவுட் ஆன முதல் பேட்ஸ்மேன் என்ற மோசமான சாதனையை மேத்யூஸ் படைத்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

நீட் விலக்கு: கூட்டணிக் கட்சிகளோடு எதிர்க்கட்சிகளையும் சந்திக்கும் உதயநிதி

மசோதாக்களை ஆளுநர்கள் இழுத்தடிப்பது ஏன்? – உச்சநீதிமன்றம் கேள்வி!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *