சாம்பியன்ஸ் டிராபி : பாக். செல்லாத இந்திய அணி… ரோகித் மட்டும் போகும் பின்னணி என்ன?

Published On:

| By Kumaresan M

கடந்த 1996 ஆம் ஆண்டு பாகிஸ்தான் இந்தியா மற்றும் இலங்கையுடன் இணைந்து, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தியது. இந்த தொடரின் இறுதி ஆட்டம் கூட லாகூரிலுள்ள கடாஃபி மைதானத்தில்தான் நடைபெற்றது. அதற்கு பிறகு, 28 ஆண்டுகள் கழித்து சாம்பியன்ஸ் டிராபி என்ற பெரிய தொடரை பாகிஸ்தான் நடத்துகிறது.

பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி இந்த தொடர் தொடங்குகிறது. ஆனால், பாகிஸ்தான் நாட்டுக்கு இந்திய அணியை பி.சி.சி.ஐ அனுப்பவில்லை. இதனால், இந்திய அணி பங்கேற்கும் ஆட்டங்கள் துபாயில் நடைபெறுகிறது. இந்திய அணி அரையிறுதி, இறுதி ஆட்டங்களுக்கு தகுதி பெற்றால் , இந்த ஆட்டங்களும் துபாயில்தான் நடைபெறும்.

நீண்ட காலத்திற்கு பிறகு மிகப் பெரிய தொடர் பாகிஸ்தான் நாட்டில் நடைபெறுவதால், போட்டியை சிறப்பாக நடத்தி காட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முனைப்பு காட்டி வருகிறது.

போட்டி தொடங்குவதற்கு முன்னதாக பிப்ரவரி 16 அல்லது 17 தேதிகளில் பிரமாண்ட தொடக்க விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஐ.சி.சி. விதிகளின்படி, இந்த தொடக்க விழா நிகழ்ச்சியில் அனைத்து அணிகளின் கேப்டன்களும் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும். எனவே, இந்திய அணியின் கேப்டன் என்ற முறையில் ரோகித் சர்மா பாகிஸ்தான் சென்று தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்பார்.

இந்திய அணி கடைசியாக கடந்த 2008 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்றது. இதே ஆண்டில் நடந்த மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பிறகு, இந்திய கிரிக்கெட் அணி உள்ளிட்ட எந்த அணிகளையும் பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டாமென்று மத்திய அரசு முடிவெடுத்து விட்டது.

இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி கராச்சியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. தொடரின் முக்கிய ஆட்டமாக பார்க்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் அணிகளின் மோதல் துபாயில் பிப்ரவரி 23 ஆம் தேதி நடைபெறுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

தை மாத நட்சத்திர பலன்கள்: உத்திரம்

தினமும் 50 ரூபா கட்டுங்க, 35 லட்சத்தை அள்ளுங்க – போஸ்ட் ஆபிஸ் புதிய திட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share