இந்திய அணி வீரர்கள் இருவரை பிசிசிஐ கட்டம் கட்ட ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்தியா – ஆப்கானிஸ்தான் டி2௦ தொடர் நாளை (ஜனவரி 11) தொடங்குகிறது. இதில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
அதேபோல விராட் கோலியும் மீண்டும் டி2௦ தொடருக்கு சேர்க்கப்பட்டு இருக்கிறார். இதற்கிடையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி2௦ தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் இருவரும் சேர்க்கப்படவில்லை.
இது ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் வட்டாரங்களிலும் மிகுந்த கேள்விகளை எழுப்பி இருந்தது. குறிப்பாக ஸ்ரேயாஸ் ஐயர் உலகக்கோப்பை தொடரில் நன்கு ஆடி இருந்தார் என்பதால், அவரை நீக்கியது ஏன்? என ரசிகர்களும் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் அதற்கான காரணம் தற்போது வெளியாகி இருக்கிறது. மனச்சோர்வாக உள்ளது என தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் தொடரில் இருந்து பாதியில் விலகிய இஷான் அதற்காக சிகிச்சை எதையும் எடுக்கவில்லை.
அதோடு பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடாமிக்கும் அவர் செல்லவில்லை. அதற்குப்பதிலாக தனியார் தொலைக்காட்சிநடத்திய கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
மேலும் துபாயில் முன்னாள் கேப்டன் தோனியுடன் நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்து கொண்டார். இதனால் அவர் நல்ல மனநிலையில் தான் இருக்கிறார் என்பது தெரிய வந்தது.
இது பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும், இதனால் தான் இஷான் பெயர் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி2௦ தொடரில் புறக்கணிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் இனி அவர் இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பது சிரமம் எனவும், தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
மறுபுறம் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில், ஸ்ரேயாஸ் மோசமான ஷாட்களை ஆடி விக்கெட்டை விரைவாக இழந்தார்.
இதனால் அவர் ராஞ்சி உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் ஆடி தன்னை நிரூபிக்கட்டும் என அகர்கர் நினைக்கிறாராம்.
ஸ்ரேயாஸ் தன்னுடைய தவறினை திருத்திக்கொண்டால் மட்டுமே, மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியும் என்ற சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பஸ் ஸ்டிரைக்: தற்காலிக ஓட்டுநர்களால் அச்சத்தில் பயணிகள்!
தற்காலிக ஓட்டுநர் இயக்கிய பேருந்து விபத்து: 50 மாணவர்கள் காயம்!