U-19 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் கோப்பையை பறிகொடுத்த நிலையில் தோல்விக்கான காரணத்தை இந்திய கேப்டன் உதய் சஹாரான் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோற்றது.
இதனையடுத்து அவர்களை பழிவாங்குவதற்கு ஒரு நல்வாய்ப்பாக தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வந்த U19 உலகக்கோப்பை போட்டி பார்க்கப்பட்டது.
எதிர்பார்த்தபடியே லீக் போட்டிகளில் ஒன்றில் கூட தோற்காமல் உதய் சஹாரன் தலைமையிலான இந்திய அணியும், வெய்பன் தலைமையில் ஆஸ்திரேலியா அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
எனினும் பெரும் எதிர்பார்ப்பிற்கிடையே பெனோனியில் நேற்று (பிப்ரவரி 8) நடைபெற்ர்ற இறுதி போட்டியில் இந்திய அணியை 79 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து விளையாடிய இந்திய அணியில் ஆரம்பம் முதல் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தன. 91 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தடுமாறியது. முடிவில் 43.5 ஓவர்களில் 174 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா.
இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 79 ரன்களில் வெற்றி பெற்று 4வது U19 உலகக்கோப்பை பட்டத்தை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் 14 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன் பட்டம் வென்றுள்ளது அந்த அணி. கடைசியாக கடந்த 2010ஆம் ஆண்டு U19 உலகக் கோப்பை தொடரில் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தோல்வி குறித்து போட்டிக்கு பின்னர் இந்திய அணி கேப்டன் உதய் சஹாரன் பேசுகையில், “இது ஒரு சிறந்த போட்டி. அணி வீரர்களை பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவர்கள் அனைவரும் நன்றாக விளையாடினர். அவர்கள் அனைவரும் தொடரின் தொடக்கத்தில் இருந்தே சிறந்த போராட்ட குணத்தை வெளிப்படுத்தினர்.
“நாங்கள் இன்று சில மோசமான ஷாட்களை விளையாடினோம், களத்தில் அதிக நேரம் செலவிட முடியவில்லை. நாங்கள் தயாராக இருந்தோம். ஆனால் செயல்படுத்த முடியவில்லை.
“ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம். தொடர்ந்து கற்றுக்கொண்டு அடுத்து வரும் தொடர்களில் சிறப்பாக முடிக்க முயற்சிப்போம்” என்று உதய் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிரிஸ்டோபர் ஜெமா
கத்தாரில் விடுதலை : இந்தியா திரும்பிய முன்னாள் கடற்படை வீரர்கள்!