நெதர்லாந்து அணிக்கு எதிரான நேற்றைய (நவம்பர் 13) போட்டியில் 9 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியது ஏன் என்பதற்கான காரணத்தை ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது நடந்து வரும் ஐசிசி உலகக்கோப்பை ஒருநாள் போட்டியில் நேற்றுடன் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டன.
புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து ஏற்கெனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட இந்திய அணியும், புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்து ஏற்கெனவே போட்டியில் இருந்து வெளியேறிய நெதர்லாந்து அணியும் மோதின.
இரு அணிகளுக்கும் எந்தவித நெருக்கடியும் இல்லாத நிலையில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி வீரர்கள் மைதானத்தில் டச்சு வீரர்களின் பந்துவீச்சை சிதறடித்து வான வேடிக்கை காட்டினர்.
ரோகித், கில், கோலி ஆகியோர் அரைசதம் அடிக்க, அடுத்து வந்த ஸ்ரேயாஸ் மற்றும் ராகுல் அதிரடி சதத்தை பதிவு செய்து ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினர்.
இதன் மூலம் 50 ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 410 ரன்கள் குவித்தது.
அதன்பின்னர் 411 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கியது நெதர்லாந்து அணி. ஆனால் பேட்டிங்கில் ஆதிக்கம் செய்த இந்திய அணி, பந்துவீச்சிலும் தொடர்ந்தது.
குறிப்பாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பிரதான பந்துவீச்சாளர்களை தாண்டி கோலி, சூர்யகுமார், கில் ஆகியோரையும் பந்துவீச செய்தார்.
https://twitter.com/Mikey_ManjiGang/status/1723753271041441847
இதனால் நேற்றைய போட்டியில் 5 பவுலர்கள் மற்றும் 4 பேட்ஸ்மேன்கள் என மொத்தம் 9 பேர் பந்துவீசினர். ஆறு ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக பந்துவீசிய விராட்கோலியும், 11 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக பந்துவீசிய கேப்டன் ரோகித் சர்மாவும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தி அசத்தினர்.
அதேபோல், உள்நாட்டு கிரிக்கெட்டில் 36 விக்கெட்டுகளை வீழ்த்திய சூர்யகுமார் யாதவ், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் முதன்முறையாக பந்துவீசி 2 ஓவர்களில் 17 ரன்களை அளித்தார். சுப்மன் கில்லும் இரண்டு ஓவர்களில் 11 ரன்களை அளித்தார்.
https://twitter.com/SkyXRohit1/status/1723748652332786070
உலகக் கோப்பை போட்டியில் இந்தியா ஒன்பது பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவது இதுவே முதல் முறை. முக்கியத்துவம் வாய்ந்த இந்த உலகக்கோப்பை போட்டியில் ரோகித் சர்மாவின் இந்த முயற்சி ரசிகர்களை மட்டுமின்றி கிரிக்கெட் நிபுணர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இதுகுறித்து கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், “ எங்களிடம் பந்துவீசுவதற்கு ஒன்பது பேர் உள்ளனர். இது முக்கியமானது. நாங்கள் சில விஷயங்களை முயற்சிக்க வேண்டும் என்று விரும்பினோம்.
அரையிறுதி இன்னும் இரண்டு நாட்களில் உள்ள நிலையில், ஒரு பந்துவீச்சு பிரிவாக, நாங்கள் என்ன சாதிக்க முடியும் என்பதைப் பார்க்க விரும்பினோம். அதனை நேற்றைய போட்டியில் செய்தோம். அதற்கு நல்ல பலனும் கிடைத்தது” என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
மும்பை வான்கடே மைதானத்தில் நாளை (நவம்பர் 15) மறுநாள் நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை சந்திக்க உள்ளது இந்தியா.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா