அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக நேற்று (பிப்ரவரி 19) அறிவித்த கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி, தோனி குறித்த ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி. இவர் கடந்த 2008ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் அறிமுகமானார். எனினும் அப்போது சச்சின், சேவாக் போன்ற ஜாம்பவான்கள் இருந்ததால் இந்திய அணியில் தொடர்ச்சியாக விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்தியா சாம்பியன் ஆன 2011 உலகக் கோப்பைக்கு பின்னர் அவருக்கு கணிசமான போட்டிகளில் விளையாட வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதில் ஒரு போட்டியில் சதமடித்து ஆட்டநாயகன் விருது வென்றிருந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் மனோஜ் திவாரி அடித்த ஒரே சதம் இதுவாகும்.
38 வயதான மனோஜ் திவாரி இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் 12 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் அரைசதத்துடன் 287 ரன்கள் குவித்துள்ளார். டி20யில் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடி 15 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டியில் விளையாடிய அதேவேளையில் முதல் தர கிரிக்கெட்டில் அவர் மொத்தம் 10,195 ரன்கள் குவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா, பஞ்சாப், புனே உள்ளிட்ட அணிக்காக விளையாடிய நிலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதற்கு இடையே இந்திய அணியில் ரோகித், விராட் கோலி ஆகியோரின் ஆதிக்கம் அதிகரித்தது.
கடைசியாக 2015ஆம் ஆண்டு ஜிம்பாவேக்கு அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு பிறகு இந்திய அணியில் மனோஜ் திவாரி சேர்க்கப்படவில்லை. மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த அவர் தற்போது அம்மாநில விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ளார்.
கடந்த சில வருடங்களாக ரஞ்சிக் கோப்பையில் விளையாடி வந்த அவர் பிகார் அணிக்கு எதிரான போட்டியுடன் நேற்று ஓய்வு பெற்றார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த மனோஜ் திவாரி உணர்ச்சிவசப்பட்டு பேசினார். அவர், “எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தோனியிடம் இதை கேட்க விரும்புகிறேன். விராட் கோலி, ரோஹித் சர்மா அல்லது சுரேஷ் ரெய்னா யாரும் ரன் எடுக்காத ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் சதம் அடித்த பிறகும் நான் ஏன் அணியில் இருந்து நீக்கப்பட்டேன் என்று தோனியிடம் கேட்க விரும்புகிறேன். நான் இப்போது இழப்பதற்கு எதுவும் இல்லை.
இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பு எனக்கு கடைசி வரை கிடைக்கவில்லை. நான் 65 முதல் தர போட்டிகளில் விளையாடி முடித்தபோது, எனது பேட்டிங் சராசரி 65 ஆக இருந்தது. அப்போது ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்திருந்தது. நான் நட்பு ரீதியான ஒரு ஆட்டத்தில் 130 ரன்கள் எடுத்திருந்தேன், பிறகு இங்கிலாந்துக்கு எதிராக ஒரு நட்பு ஆட்டத்தில் 93 நான் அடித்தேன்.
அணியில் தேர்வாகிவிடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்த எனக்கு பதிலாக அவர்கள் யுவராஜ் சிங்கை தேர்வு செய்தனர்.
சொல்லப்போனால் நான் சதமடித்து ஆட்டநாயகன் விருது வென்ற பின் 14 தொடர்ச்சியான போட்டிகளில் புறக்கணிக்கப்பட்டேன். பொதுவாக உச்சத்தில் இருக்கும் ஒரு வீரருக்கு நீங்கள் வாய்ப்பு கொடுக்காமல் போனால் அது அவரின் தன்னம்பிக்கையை உடைத்து விடும் என்று தெரியாதா?” என்று மனோஜ் திவாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
இரு பெண்களைக் கொன்ற ஒற்றை யானையைப் பிடிக்க வனத்துறையினர் தீவிரம்!