ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று (மார்ச் 28) ஜெய்ப்பூரில் நடைபெற்ற 9வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்தியது.
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி ரியான் பராக்கின் அதிரடி ஆட்டத்துடன் 185 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 173 ரன்களே எடுத்தது. இதனால் 12 ரன்கள் வித்தியாசத்தில் சொந்த மண்ணில் 2வது வெற்றியை ருசித்தது ராஜஸ்தான்.
இதற்கிடையே போட்டிக்கு நடுவே டெல்லி கேப்பிடல்ஸ் அணி தலைமை பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங் மற்றும் இயக்குநரான கங்குலி இருவரும் நடுவர்களுடன் வாக்குவாதம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
என்ன பிரச்சனை?
நேற்றைய போட்டியில் ஜோஸ் பட்லர், டிரெண்ட் போல்ட் மற்றும் சிம்ரோன் ஹெட்மயர் ஆகிய 3 வெளிநாட்டு வீரர்களை மட்டுமே ராஜஸ்தான் தங்களுடைய பிளேயிங் லெவனில் அறிவித்தது.
ஆனால் பேட்டிங் இன்னிங்ஸ் முடித்ததும் வெஸ்ட் இண்டீஸின் சிம்ரோன் ஹெட்மயருக்கு பதிலாக தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சாளரை நன்ரே பர்கரை இம்பேக்ட் வீரராக ராஜஸ்தான் அணி களமிறக்கியது.
ஆனால் டெல்லி அணி இன்னிங்ஸை தொடங்கியதும் முதல் ஓவரின் 2வது பந்து முடிவில் களத்தில் இருந்த இந்திய வீரர் சுபம் துபேவுக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரோவ்மன் போவலை சப்ஸ்டிடியூட் வீரராக ஃபீல்டிங் செய்ய வருமாறு ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் அழைத்தார்.
அதனால் அதிருப்தியடைந்த டெல்லி அணி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், ”பிளேயிங் லெவனில் 3 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்ட நிலையில் இப்போது மட்டும் எப்படி 4 வெளிநாட்டு வீரர்கள் ஃபீல்டிங் செய்ய முடியும்? என்று கோபத்துடன் பாண்டிங் மைதானத்தில் இருந்த நடுவர்களை நோக்கி கேள்வி எழுப்பினார்.
இதுதொடர்பாக டெல்லி அணியின் தொடக்க வீரரான வார்னரும், நடுவர் நிதின் மேனனிடம் கேள்வி எழுப்பினார்.
இதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இந்த குழப்பத்திற்கு பதிலளிப்பதற்காக 4வது அம்பையர் ரிக்கி பாண்டிங்கிடம் பேச வேகமாக ஓடி வந்தார். அவரிடம் டெல்லி அணியின் இயக்குனர் சௌரவ் கங்குலியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதற்கு நடுவர், விதிமுறைக்கு உட்பட்டு தான் ரோவ்மன் போவலை ஃபீல்டிங் செய்ய சஞ்சு சாம்சன் அழைத்துள்ளார் என்றும், இதில் ராஜஸ்தான் அணி எந்த தவறும் செய்யவில்லை என்றும் விதிமுறை தாளை காண்பித்து விளக்கினார்.
நடுவரின் பொறுமையான விளக்கத்தை அடுத்து பாண்டிங் மற்றும் கங்குலி இருவரும் அமைதியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சரி ஐபிஎல் விதிமுறை சொல்வதென்ன?
விதி 1.2.5ன் படி, ஒவ்வொரு அணியும் அதன் பிளேயிங் லெவனில் அதிகபட்சமாக 4 வெளிநாட்டு வீரர்களை மட்டுமே பயன்படுத்த முடியும்.
விதி 1.2.6ன் படி, பிளேயிங் லெவனில் நான்குக்கும் குறைவான வெளிநாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் வேறொரு வெளிநாட்டு வீரர் மற்றொரு எந்த வீரருக்கு பதிலாகவும் சப்ஸ்டியூட் வீரராக செயல்பட முடியும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பாஜக வரி தீவிரவாதத்தில் ஈடுபடுகிறது : காங்கிரஸ் குற்றச்சாட்டு!
வட சென்னையில் ஐடி ஹப்: கலாநிதி வீராசாமி